இந்தியா

பப்புவா நியூ கினியாவுக்கு நிவாரண பொருள்கள் அடங்கிய விமானத்தை அனுப்பியது இந்தியா

Published On 2023-12-21 15:14 GMT   |   Update On 2023-12-21 15:14 GMT
  • பப்புவா நியூ கினியா நாட்டில் எரிமலை வெடிப்பு ஏற்பட்டது.
  • இதனால் அங்கிருந்த மக்கள் அப்புறப்படுத்தப்பட்டனர்.

புதுடெல்லி:

பப்புவா நியூ கினியாவில் உள்ள உலாவுன் மலையில் கடந்த மாதம் எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. இதனால் சுமார் 26 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். அந்தப் பகுதியில் கடும் பேரழிவு ஏற்பட்டது.

இதற்கிடையே, பேரழிவால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்புகளுக்காக பப்புவா நியூ கினியா அரசுக்கும், அந்நாட்டு மக்களுக்கும் இந்தியா ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், எரிமலை வெடிப்பினால் ஏற்பட்ட பாதிப்புகளைச் சமாளிக்க பப்புவா நியூ கினியா நாட்டிற்கு உடனடி நிவாரண உதவியாக 1 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான நிவாரண பொருள்களை இந்தியா அனுப்பியுள்ளது. இதுதொடர்பாக வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

இயற்கை பேரழிவால் ஏற்படும் நெருக்கடி, பேரழிவுகளின்போது இந்தியா பப்புவா நியூ கினியாவுடன் உறுதியாக நிற்கிறது. பப்புவா நியூ கினியாவுக்கு இந்தியா நிவாரண உதவிகளை வழங்குகிறது.

அதன் ஒருபகுதியாக, 11 டன் பேரிடர் நிவாரணப் பொருள்கள் மற்றும் 6 டன் மருத்துவ உதவிகளுடன் இந்தியா சிறப்பு விமானத்தை பப்புவா நியூ கினியாவுக்கு அனுப்பியுள்ளது.

நிவாரணப் பொருட்களில் கூடாரங்கள், தூங்கும் பாய்கள், சுகாதாரக் கருவிகள், சாப்பிடத் தயாராக இருக்கும் உணவுகள், தண்ணீர் சேமிப்பு தொட்டிகள், அத்தியாவசிய மருந்துகள், அறுவை சிகிச்சைப் பொருட்கள், சானிட்டரி பேட்கள், ரேபிட் ஆன்டிஜென் சோதனைக் கருவிகள், கர்ப்ப பரிசோதனைக் கருவிகள், கொசு விரட்டிகள் மற்றும் குழந்தை உணவுகள் ஆகியவை அடங்கும் என தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News