இந்தியா

சுதந்திர தின விழா- டெல்லியில் உச்சகட்ட பாதுகாப்பு

Update: 2022-08-13 08:12 GMT
  • சுதந்திர தினத்தையொட்டி இந்திய எல்லை பகுதியும் உஷார்படுத்தப்பட்டு உள்ளது.
  • செங்கோட்டை மற்றும் விழா நடைபெறும் பகுதியில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

புதுடெல்லி:

இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகி விட்டது. இதனால் இந்த ஆண்டு சுதந்திர தின விழாவை சிறப்பாக கொண்டாட ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

தலைநகர் டெல்லியில் வருகிற 15-ந்தேதி நடைபெறும் விழாவில் பிரதமர் நரேந்திரமோடி தேசிய கொடி ஏற்றி வைத்து உரையாற்றுகிறார்.

இந்த விழாவையொட்டி இதுவரை இல்லாத வகையில் டெல்லி நகரில் உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. இம்மாத தொடக்கத்தில் இருந்தே விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் சோதனைகள் மும்முரமாக நடந்து வருகிறது.

செங்கோட்டை மற்றும் விழா நடைபெறும் பகுதியில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

சுதந்திர தின விழாவை சீர்குலைக்க பயங்கரவாதிகள் சதி செயல்களில் ஈடுபடலாம் என்று அச்சுறுத்தல் நிலவுவதால் டெல்லி மாநகர் முழுவதும் கண்காணிப்பு பணிகள் முடுக்கி விடப்பட்டு உள்ளது.

பல்வேறு மாநிலங்களில் இருந்தும் டெல்லி நகருக்குள் நுழையும் வாகனங்கள் அனைத்தும் தீவிர சோதனை செய்த பிறகே அனுமதிக்கப்படுகிறது.

டெல்லியில் உள்ள ஓட்டல்கள், விருந்தினர் மாளிகைகள், வாகனங்கள் நிறுத்தும் இடங்கள், உணவகங்கள்,வணிக வளாகங்கள், முக்கிய கட்டிடங்கள் அனைத்தும் போலீசாரின் தீவிர கண்காணிப்பில் உள்ளன.

தங்கும் விடுதிகளில் நாசவேலை கும்பல் யாராவது தங்கி இருக்கிறார்களா? என்பதை கண்டறிவதற்காக போலீசார் சோதனை நடத்தி வருகிறார்கள்.

டெல்லியில் தடுப்புகள் அமைத்து தீவிர வாகன சோதனையிலும் அவர்கள் ஈடுபட்டு உள்ளனர். முக்கிய வீதிகளில் உயர்ரக கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டு உள்ளன. 24 மணி நேரமும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருக்கிறார்கள்.

சாதாரண உடைகளிலும் போலீசார் நகர் முழுவதும் சுற்றி வருகிறார்கள்.

சுதந்திர தினம் முடியும் வரை பட்டங்கள் பறக்க விடவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

சுதந்திர தினத்தையொட்டி இந்திய எல்லை பகுதியும் உஷார்படுத்தப்பட்டு உள்ளது. பாகிஸ்தானில் இருந்து அவ்வப்போது டிரோன்கள் அத்துமீறி இந்திய எல்லைக்குள் பறந்து வருகிறது. இதனை சுட்டு வீழ்த்தவும் உத்தரவிடப்பட்டு உள்ளது. எல்லையில் ராணுவ வீரர்களுடன் உள்ளூர் போலீசாரும் பாதுகாப்பு பணியை மேற்கொண்டு உள்ளனர்.

Tags:    

Similar News