இந்தியா

தெருவோர வியாபாரிகளுக்கு போலீசாரால் ஏற்படும் தொந்தரவுகள் தடுக்கப்படும்: டி.கே.சிவக்குமார்

Published On 2023-01-21 02:40 GMT   |   Update On 2023-01-21 02:40 GMT
  • விலைவாசி உயர்வால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
  • தெருவோர வியாபாரிகளுக்கு தேவையான உதவிகள் செய்யப்படும்.

பெங்களூரு:

தெருவோர வியாபாரிகள் சங்கங்களின் மாநாடு பெங்களூரு டவுன் ஹாலில் நேற்று நடைபெற்றது. இந்த மாநாட்டில் கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் கலந்து கொண்டு பேசியதாவது:- உங்களின் (தெருவோர வியாபாரிகள்) எண்ணிக்கை குறைவு இல்லை. உங்களால் சொந்தமாக கடையை நடத்த முடியவில்லை. நீங்கள் தவறான வழியில் போகாமல் நேர்மையாக உழைத்து சுயமரியாதையுடன் வாழ்க்கையை நடத்துகிறீர்கள். உங்களின் குறைகள் என்ன என்பதை நான் அறிவேன். உங்களின் சுயமரியாதை வாழ்க்கைக்கு உதவுவது எங்களின் கடமை. அதை நாங்கள் செய்வோம்.

நமது நாட்டிற்கு நீங்கள் அனைவரும் சொத்து. தரமான பொருட்களை நீங்கள் குறைந்த விலைக்கு விற்கிறீர்கள். நான் மாணவராக இருந்தபோது, தெருவோர கடையில் உணவு சாப்பிட்டது உண்டு. உங்களின் மீது காங்கிரஸ் அதிக அக்கறையுடன் செயல்படுகிறது. உங்களின் வாழ்க்கையை தினசரி வட்டி நெருக்கடியில் இருந்து பாதுகாக்க வேண்டும்.

வங்கிகளில் உங்களுக்கு ரூ.15 ஆயிரம் வரை கடன் வழங்கப்படுகிறது. நிலத்தை உழுபவரே அதன் உரிமையாளர் என்று சட்டத்தை கொண்டு வந்ததும் காங்கிரசே. இதன் மூலம் நிலம் இல்லாதவர்களுக்கும் நிலம் கிடைத்தது. உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஒருவருக்கு 7 கிலோ வரை இலவச அரிசி வழங்கும் அன்ன பாக்கிய திட்டத்தை நாங்கள் தொடங்கினோம்.

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் போலீசார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளால் உங்களுக்கு ஏற்படும் தொந்தரவுகளை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். சட்டசபை தேர்தலையொட்டி நாங்கள் பெலகாவியில் இருந்து பஸ் யாத்திரையை தொடங்கியுள்ளோம். முதல் நாளில் 200 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்குவதாக அறிவித்துள்ளோம்.

குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் உதவித்தொகை வழங்கும் திட்டத்தையும் அமல்படுத்துவோம். விலைவாசி உயர்வால் சாமானிய மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இத்தகைய சூழ்நிலையில் இந்த திட்டங்களை அமல்படுத்தினால் அது நடுத்தர மக்களுக்கு பெரும் உதவியாக இருக்கும். தெருவோர வியாபாரிகளுக்கு தேவையான உதவிகள் செய்யப்படும். இந்த பா.ஜனதா ஆட்சியில் மக்களுக்கு தேவையான எந்த திட்டத்தையும் அமல்படுத்தவில்லை.

இவ்வாறு டி.கே.சிவக்குமார் பேசினார்.

Tags:    

Similar News