இந்தியா

நல்லவர்களுக்கு அரசியலில் இடமில்லை: ஆதித்ய தாக்கரே வேதனை

Published On 2022-07-22 02:44 GMT   |   Update On 2022-07-22 02:44 GMT
  • எங்களை விட்டு சென்றவர்கள் சிவசேனாக்காரர்கள் அல்ல. அவர்கள் துரோகிகள்.
  • அரசியல் நாடகமும், சர்க்கசும் மாநிலத்தில் நடந்து கொண்டு இருக்கிறது.

மும்பை:

சிவசேனா உத்தவ் தாக்கரே, ஏக்நாத் ஷிண்டே அணி 2 ஆக உடைந்த நிலையில், இளைஞர் அணி தலைவர் ஆதித்ய தாக்கரே 'சிவ் சாம்வத் யாத்ரா ' என 3 நாள் பயணத்தை தொடங்கி உள்ளார். இதில் அவர் தானே மாவட்டம் பிவண்டியின் கட்சியினரை சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

மக்களின் ஆசியை பெற நான் இந்த யாத்திரையை தொடங்கி இங்கு வந்து உள்ளேன். நான் புதிய சிவசேனா, மகாராஷ்டிராவை கட்டமைக்க புறப்பட்டுள்ளேன். மகாவிகாஸ் அகாடி அரசு மாநிலத்தில் மேம்பாட்டு பணிகளை செய்தது. ஆனால் தற்போதைய அரசில் 2 பேர் மட்டுமே மந்திரிசபையில் உள்ளனர்.

மாநிலம் வெள்ளத்தில் தத்தளிக்கும் போது, அதிருப்தி அணியினர் எங்களை மிரட்ட முயற்சி செய்கிறார்கள். அந்த யுக்திகளுக்கு எல்லாம் நாங்கள் செவி கொடுக்கபோவதில்லை. இந்த அரசு கவிழப்போவது நிச்சயம். இது சட்டவிரோதமாக அமைக்கப்பட்டது. எனது தந்தை உடல்நலம் சரியில்லாமல் இருந்த போது ஏக்நாத்ஷிண்டே வெளியேறினார்.

அதிருப்தி அணியினருக்கு மந்திரி சபையில் இடம் கொடுக்கப்பட்டு இருந்தது. ஆனால் அவர்கள் எங்களுக்கு துரோகம் செய்தனர். விட்டு சென்றனர். எங்களை விட்டு சென்றவர்கள் சிவசேனாக்காரர்கள் அல்ல. அவர்கள் துரோகிகள். மறைத்து வைக்கப்பட்டு வாக்களிக்க பஸ்சில் அழைத்து வரப்பட்ட அதிருப்தி எம்.எல்.ஏ.களின் நிலையை பொறுத்து இருந்து பாருங்கள்.

அரசியல் செய்தாதது மட்டும்தான் நாங்கள் செய்த தவறு. எனவே தான் இந்த சூழ்நிலையை எதிர்கொண்டு உள்ளோம். எங்களுக்கு எதிரானவர்களை நாங்கள் துன்புறுத்தவில்லை. மனம் திருந்தி வரும் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு மாதோஸ்ரீயின் கதவுகள் திறந்தே இருக்கும்.

அரசியல் நாடகமும், சர்கசும் மாநிலத்தில் நடந்து கொண்டு இருக்கிறது. நல்லவர்களுக்கு அரசியலில் இடமில்லை. நாங்கள் நல்ல மனிதர்கள். நல்ல அரசியலை செய்வோம். உத்தவ் தாக்கரேவும், ஆதித்ய தாக்கரேவும் சட்டசபைக்கு வந்தது தான் அதிருப்தியாளர்களின் பிரச்சினை. அவர்களால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News