இந்தியா

பிரமோத் சாவந்த், சோனாலி போகத் 

நடிகை சோனாலி போகத் மரண வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்க தயார்: கோவா முதல்வர் பேட்டி

Published On 2022-08-28 10:47 GMT   |   Update On 2022-08-28 10:52 GMT
  • இந்த வழக்கில் இதுவரை சோனாலி உதவியாளர், நண்பர் உள்பட 5 பேர் கைது.
  • சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை.

பனாஜி:

அரியானாவைச் சேர்ந்த பிரபல நடிகையும் பாஜகவை சேர்ந்தவருமான சோனாலி போகத் (வயது 42), கடந்த 22ம் தேதி கோவாவில் மர்மமான முறையில் உயிரிழந்தார். பிரேத பரிசோதனை அறிக்கையில் அவரது உடலில் காயங்களுக்கான அடையாளங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. சோனாலி, தனது உதவியாளர் சுதிர் சங்வான் மற்றும் அவரது நண்பர் சுக்விந்தர் ஆகியோரால் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதாக சந்தேகம் உள்ளதாக கூறி அவர்கள் மீது குடும்பத்தினர் புகார் அளித்துள்ளனர்.

அதன் அடிப்படையில் சுதிர் சங்வான் மற்றும் அவரது நண்பர் சுக்விந்தர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவர்களை கைது செய்தனர். அதன் பின்னர் உணவு விடுதி உரிமையாளர் மற்றும் சந்தேகத்திற்குரிய வகையிலான போதைப் பொருள் கடத்தல்காரர் உள்பட ஐந்து பேரை கோவா போலீசார் கைது செய்துள்ளனர்.

சோனாலி போகத் இரவு விடுதியில் இருந்து வெளியே செல்லும் வழியில் தடுமாறிக் கொண்டிருந்த வீடியோ பதிவை  போலீசார் வெளியிட்டனர். மேலும் இந்த வழக்கில் புதிய ஆதாரமாக மற்றொரு சிசிடிவி காட்சி வெளியானது.

அதில் சோனாலி போகத் இறப்பதற்கு சில மணி நேரத்திற்கு முன்பாக, நடன அரங்கில் அவரை கட்டாயப்படுத்தி மது குடிக்க வைப்பதாக அந்த காட்சி அமைந்துள்ளது. வீடியோவில் உள்ள நபர், கைது செய்யப்பட்ட சுதிர் சங்வான் போன்று தெரிகிறது. ஒரு நாள் முன்பு வெளிவந்த வீடியோ பதிவில், கிளப்பில் இருந்து சோனாலி போகத் வெளியேற அவர் உதவியது தெரிந்தது.

சம்பந்தப்பட்ட இடங்களில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை விசாரணை அதிகாரி ஆய்வு செய்ததில், சுதிர்,  சோனாலிக்கு தண்ணீர் பாட்டிலில் இருந்த திரவத்தை வலுக்கட்டாயமாக குடிக்க வைத்தது தெரிய வந்திருப்பதாக காவல்துறை கூறியுள்ளது.

இந்நிலையில் சோனாலி போகத் மரணம் தொடர்பான வழக்கை தேவைப்பட்டால் சிபிஐயிடம் ஒப்படைக்கத் தயாராக இருப்பதாக கோவா முதலமைச்சர் பிரமோத் சாவந்த் தெரிவித்துள்ளார்.

பனாஜியில் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது, கோவா போலீசார் இந்த வழக்கை முழுமையாக விசாரித்து வருகின்றனர். அரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் ஏற்கனவே தன்னிடம் பேசி இந்த வழக்கு தொடர்பாக விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த வழக்கை சிபிஐ கைப்பற்ற வேண்டும் என்று போகத் குடும்பத்தினர் விரும்புவதாக அரியானா மாநில பிரதிநிதி தன்னிடம் கூறியுள்ளார். இதில் தமக்கு எந்த பிரச்சனையும் இல்லை. தேவைப்பட்டால், இந்த வழக்கை சிபிஐயிடம் அரசு ஒப்படைக்கும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News