இந்தியா

பருவம் அடைந்தது தவறா?- பெற்ற தாயால் வீட்டில் சிறை வைக்கப்பட்ட சிறுமி

Published On 2025-11-20 07:35 IST   |   Update On 2025-11-20 07:35:00 IST
  • நன்றாக படிக்கும் மவுனிகா வகுப்பில் முதல் மாணவியாக திகழ்ந்தார்.
  • அக்கம்பக்கத்தினர் கேட்டதற்கு ஆத்திரத்தில் அவர்களை கடுமையாக திட்டியுள்ளார்.

'பெண் குழந்தைகளை பெற்ற தந்தைக்குதான் தெரியும் முத்தம் காமத்தில் சேர்ந்தது இல்லை' என்ற சினிமா வரிகள் மகத்துவமானது. அதே தந்தைக்குதான் தெரியும் அந்த குழந்தையை வளர்த்து திருமணம் செய்து வைப்பது எவ்வளவு கஷ்டம் என்று.

ஆமாம். பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு முழுமையாக இருக்கிறதா? என்றால் பாதுகாப்பு இருக்கிறது என்று உறுதியாக கூறமுடியாது.

அதற்காக நாம் பெண் குழந்தைகளை பள்ளிக்கோ, கல்லூரிக்கோ, வெளியிடத்திற்கோ அனுப்பாமல் இருக்க முடியுமா? அனுப்பித்தான் ஆக வேண்டும்.

ஆனால் ஆந்திராவில் ஒரு தாய், நாள்தோறும் பெண்களுக்கு எதிரான கொடுமைகளை பார்த்து பயந்து தனது மகளை வீட்டுக்குள்ளேயே பூட்டி வைத்திருந்த கொடுமை நடந்துள்ளது. கணவர் இல்லாததால் பள்ளியில் நன்றாக படித்துக்கொண்டிருந்த மகள் பருவ வயதை எட்டியதும் வெளியுலகமே தெரியாமல் வீட்டுக்குள் பூட்டி வைத்துள்ளார்.

அந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டம் இச்சாபுரத்தில் வசித்து வருபவர் பாக்கியலட்சுமி. கணவர் இறந்துவிட்டதால் மகள் மவுனிகாவுடன் வசித்து வந்தார். மவுனிகா அந்தப்பகுதியில் உள்ள பள்ளிக்கூடத்தில் படித்து வந்தார்.

நன்றாக படிக்கும் மவுனிகா வகுப்பில் முதல் மாணவியாக திகழ்ந்தார். இதற்கிடையே கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு மவுனிகா பருவவயதை எட்டினார். இதனால் அவரை பள்ளிக்கு அனுப்பாமல் பாக்கியலட்சுமி வீட்டிலேயே வைத்திருந்தார்.

அதுமட்டுமல்லாமல் வீட்டை விட்டு வெளியே அனுப்பாமல் வீட்டுக்குள்ளேயே மகளை அடைத்து வைத்துள்ளார். ஒரு நாள் இல்லை, 2 நாள் இல்லை. 3 ஆண்டுகளாக மகளை வீட்டுக்குள்ளேயே அடைத்து வைத்துள்ளார் அந்த தாய்.

ஓய்வூதியம் மூலமாக காலத்தை ஓட்டி வந்த பாக்கியலட்சுமி, வெளியிடங்களுக்கு செல்லும்போது வீட்டின் மின் இணைப்பை துண்டித்துள்ளார். மகளை உள்ளே வைத்து வீட்டை பூட்டி சென்று வந்துள்ளார். இருட்டில் அந்த சிறுமி தவித்து வந்தார்.

அக்கம்பக்கத்தினர் இதுகுறித்து கேட்டதற்கு ஆத்திரத்தில் அவர்களை கடுமையாக திட்டியுள்ளார். இதனால் அவரை யாரும் கண்டுகொள்ளவில்லை. இந்த விஷயத்தை அறிந்த அந்தப்பகுதி அங்கன்வாடி ஊழியர் ஒருவர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

இதனையடுத்து போலீசார் பாக்கியலட்சுமியின் வீட்டுக்கு நேரில் சென்று கதவை தட்டினர். ஆனால் திறக்கவில்லை. அப்போது அதிகாரி ஒருவர் வீட்டை அளக்க சர்வேயர் வந்துள்ளேன் என்று சொன்னதும் பாக்கியலட்சுமி கதவை திறந்துள்ளார். உடனே போலீசாரும், அதிகாரிகளும் அதிரடியாக வீட்டுக்குள் நுழைந்து சிறுமியை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

மேலும் தாயாருக்கு கவுன்சிலிங் கொடுக்க ஏற்பாடு செய்துள்ளனர். இந்த சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News