நாங்கள் வெயிட்டிங், விரைவில் திருமணம் செய்யுங்கள்: ராகுல் காந்திக்கு வேண்டுகோள் வைத்த ஸ்வீட் கடை உரிமையாளர்
- பழைய டெல்லியில் உள்ள பாரம்பரியமிக்க ஸ்வீட் கடைக்கு ராகுல் காந்தி சென்றார்.
- அங்கு இரண்டு வகையான ஸ்வீட்களை செய்து அசத்தினார்.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், தற்போதைய மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி இன்று தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பழைய டெல்லியில் உள்ள நூற்றாண்டு பாரம்பரியமிக்க பழமையான ஸ்வீட் கடையான Ghantewala sweet shop-க்கு சென்றார்.
அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மறைந்த அவரது தந்தை ராஜீவ் காந்திக்கு இமார்தி (Imarti), பெசான் லட்டுகள் (Besan Laddus) பிடிக்கும். இதை நீங்கள் கட்டாயம் செய்ய வேண்டும் என ஸ்வீட் கடை உரிமையாளர் சுஷாந்த் ஜெயின் அன்பான வேண்டுகோள் விடுத்தார்.
இதனைத் தொடர்ந்து ஊழியர் ஒருவர் உதவியுடன் இரண்டு ஸ்வீட்களையும் தயாரித்தார். பின்னர் அக்கடையின் ஊழியர்களுடன் தீபாவளி கொண்டாடினார்.
பின்னர் ராகுல் காந்தி வருகை தந்தது குறித்து கடை உரிமையாளர் சுஷாந்த் ஜெயின் கூறியதாவது:-
அவரது தந்தை ராஜீவ்காந்திக்கு பிடித்தமான இரண்டு ஸ்வீட்களை அவரே செய்து ருசி பார்த்தார். பின்னர் கடையில் உள்ள ஊழியர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
அவரிடம் விரைவில் திருமணம் செய்யுங்கள். நாங்கள் காத்திருக்கிறோம். நீங்கள் திருமணம் செய்தால்தான் நாங்கள் ஸ்வீட் ஆர்டர் வாங்க முடியும் எனத் தெரிவித்தேன்.
இவ்வாறு சுஷாந்த் ஜெயின் தெரிவித்துள்ளார்.
மேலும், ராகுல் காந்தி அவரது வீட்டிற்கு, நண்பர்களுக்கு, உறவினர்களுக்கு ஸ்வீட் வாங்க விரும்பினார். இது உங்கள் கடை போன்றது" என்று தெரிவித்ததாகவும் கூறினார்.
முன்னதாக ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் "பழைய டெல்லியில் உள்ள புகழ்பெற்ற மற்றும் வரலாற்று சிறப்புமிக்க கந்தேவாலா இனிப்புக் கடையில் இமார்டி மற்றும் பெசன் லட்டுகளை தயாரிக்க முயற்சித்தேன். பல நூற்றாண்டுகள் பழமையான இந்த மதிப்புமிக்க கடையின் இனிப்பு இன்றும் அப்படியே உள்ளது. தூய்மையானது, பாரம்பரியமானது மற்றும் இதயத்தைத் தொடுவது. தீபாவளியின் உண்மையான இனிப்பு தட்டில் மட்டுமல்ல, உறவுகளிலும் சமூகத்திலும் உள்ளது" என வீடியோ வெளியிட்டு குறிப்பிட்டிருந்தார்.