அடைக்கலம் தந்த இந்திய மக்களுக்கு நன்றி.. வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா
- ஷேக் ஹசீனாவை நாடு கடத்த தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
- யூனுஸ் பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி செய்கிறார்.
தான் வாழ்வதற்கு பாதுகாப்பான புகலிடத்தை வழங்கியதற்காக இந்திய மக்களுக்கு வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா நன்றி தெரிவித்துள்ளார்.
மாணவர் போராட்டங்களைத் தொடர்ந்து அவாமி லீக் ஆட்சிக் கவிழ்ந்து ஆகஸ்ட் 2024 இல் ஷேக் ஹசீனா இந்தியாவுக்கு தப்பி வந்தார்.
வங்கதேசத்தில் தற்போது நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசாங்கம் ஆட்சி செய்கிறது.
மக்கள் மீது படைகளை ஏவி தாக்குதல் நடத்தியது உள்ளிட்ட மனிதாபிமான மீறல் குற்றச்சாட்டுகளுக்காக அந்நாட்டு நீதிமன்றத்தில் ஷீக் ஹசீனா பல்வேறு வழக்குகள் விசாரணையில் உள்ளது.
ஷேக் ஹசீனாவை நாடு கடத்த தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கிடையே ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சிக்கும் தடை விதிக்கப்பட்டது.
அடுத்த ஆண்டு பிப்ரவரியில் வங்கதேசம் தேர்தல்களை சந்திக்கவுள்ள நிலையில், ஷேக் ஹசீனா யூனுஸ் அரசை தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.
ஷேக் ஹசீனாவின் ஆட்சியின் கீழ் வங்கதேசம் இந்தியாவுடன் சுமூகமான உறவில் இருந்த நிலையில் தற்போது முகமது யூனுஸ் பாகிஸ்தான் மற்றும் சீனாவுடன் நெருக்கம் காட்டி வருகிறார்.
இந்நிலையில் இந்திய அங்கில ஊடகத்திற்கு ஷேக் ஹசீனா அளித்த பேட்டியில், வன்முறை மற்றும் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் முகமது யூனுஸின் நிலைப்பாடுதான் இந்தியாவுடனான வங்கதேச உறவுகள் மோசமடையக் காரணம்.
யூனுஸ் பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி செய்கிறார். இது இந்தியாவிற்கும் வங்கதேசத்திற்கும் இடையிலான உறவை மோசமாக்கும்.
சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல், சட்ட ரீதியான ஒடுக்குமுறைகள் இருநாடுகளுக்கு இடையேயான மோதல் போக்கிற்கு காரணம். இதுபோன்ற செயல்பாடுகளை வங்கதேச மக்கள் விரும்பவில்லை. இருநாடுகளிடையேயான உறவு மிகவும் ஆழமானது. இந்தியா எங்களின் உண்மையான நட்பு நாடு என்பதில் பெருமை கொள்கிறோம்.
இத்தனை நாட்கள் பாதுகாப்பான அடைக்கலம் கொடுத்த இந்திய மக்களுக்கு நான் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்
ஆட்சியில் இருந்தபோது மக்களைத் தாக்க படைகளுக்கு நான் உத்தரவிட்டேன் என்பதை நிரூபிக்க எந்த ஆதாரமும் இல்லை. இதை நீதிமன்றத்தில் நிரூபிக்க முடியும். இருப்பினும், வங்கதேசத்தில் இப்போது சுதந்திரமான நீதித்துறை அமைப்பு இல்லை.
அவாமி லீக் கட்சி முறையற்ற காரணத்திற்காக தடை செய்யப்பட்டது. சட்டப்பூர்வமாக அதை எதிர்த்துப் போராடுவேன்" என்று தெரிவித்துள்ளார்.