இந்தியா

விண்வெளியில் இந்திய ஆய்வு நிலையத்தின் மாதிரியை வெளியிட்டது இஸ்ரோ

Published On 2025-08-22 23:37 IST   |   Update On 2025-08-22 23:37:00 IST
  • தேசிய விண்வெளி தினம் ஆகஸ்ட் 23-ம் தேதி கொண்டாடப்படுகிறது.
  • 2028-ம் ஆண்டுக்குள் முதல் விண்வெளி ஆய்வுமையத்தை நிறுவ இந்தியா திட்டமிட்டுள்ளது.

புதுடெல்லி:

தேசிய விண்வெளி தினத்தை முன்னிட்டு இந்தியாவின் முதல் சுற்றுப்பாதை ஆய்வகமான 'பாரதிய அந்தரிக்ஸ்' நிலையத்தின் மாதிரியை டெல்லி பாரத் மண்டபத்தில் இஸ்ரோ காட்சிக்கு வைத்துள்ளது.

ஆகஸ்ட் 23-ம் தேதி, தேசிய விண்வெளி தினத்தை முன்னிட்டு இந்த ஏற்பாட்டை இஸ்ரோ செய்துள்ளது.

உலகின் 5 முன்னணி விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்கள் சார்பில் சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையம் நிர்வகிக்கப்படுகிறது. அதுதவிர, சீனா சார்பில் ஒரு சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையமும் உள்ளது. இந்தியா சார்பிலும் விண்வெளி ஆய்வு மையம் அமைக்க ஏற்பாடுகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன.

பாரத் அந்தரிக்ஸ் எனப்படும் ஆய்வு நிலையங்களை விண்வெளியில் நிலைநிறுத்த முயற்சி மேற்கொண்டுள்ள இந்தியா, அவற்றை 10 டன் எடை கொண்டதாகத் தயாரித்து வருகிறது.

பி.ஏ.எஸ்-01 தொகுதி 10 டன் எடையுள்ளதாக இருக்கும். பூமியிலிருந்து 450 கி.மீ. உயரத்தில் குறைந்த பூமி சுற்றுப்பாதையில் நிலை நிறுத்தப்படும். இவை இளைய தலைமுறையினர் விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் ஆய்வு செய்வதற்கான வாய்ப்புகளை ஊக்குவிக்கும்.

வரும் 2028-ம் ஆண்டுக்குள் முதலாவது விண்வெளி ஆய்வு மையத்தை நிறுவ இந்தியா திட்டமிட்டுள்ளது. 2035ம் ஆண்டிற்குள் குறைந்தபட்சம் 5 ஆய்வு மையங்களை விண்வெளியில் நிலைநிறுத்த இந்தியா முடிவு செய்துள்ளது.

விண்வெளி, உயிர் அறிவியல், மருத்துவம் மற்றும் கோள்களுக்கு இடையேயான ஆய்வு ஆகியவற்றின் பல்வேறு அம்சங்களைப் ஆய்வு செய்வதற்கான தளமாக பாரதிய அந்தரிக்ஸ் நிலையம் செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இது மனித ஆரோக்கியத்தில் நுண் ஈர்ப்பு விசையின் விளைவுகளை ஆய்வு செய்வதற்கும், விண்வெளியில் நீண்டகால மனித இருப்புக்குத் தேவையான அத்தியாவசிய தொழில்நுட்பங்களை சோதிப்பதற்கும் ஒரு வாய்ப்பை வழங்கும் என கூறப்படுகிறது.

Tags:    

Similar News