இந்தியா

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஸ்ரீவாணி அறக்கட்டளை டிக்கெட் பெறும் 1000 பக்தர்களுக்கு நேரடி தரிசனம்

Published On 2025-07-31 10:31 IST   |   Update On 2025-07-31 10:31:00 IST
  • தரிசன டிக்கெட் ஒதுக்கீட்டில் எந்த மாற்றமும் இல்லாமல் 500 டிக்கெட்டுகள் ஆன்லைனில் வழங்கப்படுகிறது.
  • அக்டோபர் 31 வரை ஆன்லைன் தரிசன டிக்கெட் பக்தர்கள் காலை 10 மணிக்கு மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

திருப்பதி:

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஸ்ரீ வாணி அறக்கட்டளை டிக்கெட் மூலம் ரூ.10,500 கட்டணத்தில் தினமும் 1,500 பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.

தற்போது ஸ்ரீவாணி டிக்கெட்டுகளை பெற்ற பக்தர்கள் 3 நாட்களுக்கு பிறகு தரிசனம் செய்கின்றனர். இது சம்பந்தமாக திருப்பதி தேவஸ்தான முதன்மை செயல் அலுவலர் வெங்கைய சவுத்ரி தலைமையில் நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது.

கூட்டத்தில் ஸ்ரீ வாணி டிக்கெட் மூலம் பக்தர்கள் தினமும் தரிசனம் செய்ய தரிசன நேரத்தில் மாற்றம் கொண்டுவரப்பட்டது. நாளை முதல் 15-ந்தேதி வரை சோதனை ஓட்டமாக திருப்பதி மலையில் உள்ள ஸ்ரீவாணி டிக்கெட் வழங்கும் மையத்தில் தினமும் காலை 10 மணி முதல் முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் 800 பக்தர்களுக்கும், ரேணிகுண்டா விமான நிலையத்தில் காலை 7 மணி முதல் 200 நேரடி தரிசன டிக்கெட் வழங்கப்பட உள்ளது. தரிசன டிக்கெட் ஒதுக்கீட்டில் எந்த மாற்றமும் இல்லாமல் 500 டிக்கெட்டுகள் ஆன்லைனில் வழங்கப்படுகிறது.

ஸ்ரீவாணி தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள் வைகுந்தம் வரிசை எண் 1 மூலம் மாலை 4.30 மணிக்கு தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். அக்டோபர் 31 வரை ஆன்லைன் தரிசன டிக்கெட் பக்தர்கள் காலை 10 மணிக்கு மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

நவம்பர் 1-ந்தேதி முதல் ஆன்லைன் மற்றும் நேரடியாக டிக்கெட் பெற்ற பக்தர்கள் மாலை 4.30 மணிக்கு தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவித்தனர்.

ஸ்ரீவாணி அறக்கட்டளை டிக்கெட் பெற்ற பக்தர்கள் அன்றே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

திருப்பதியில் நேற்று 77,044 பேர் தரிசனம் செய்தனர். 28,478 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.5.44 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 12 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News