இந்தியா

மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியை காக்க தொடர்ந்து போராடுவேன்: தேவகவுடா

Published On 2022-07-02 02:18 GMT   |   Update On 2022-07-02 02:18 GMT
  • நெஞ்சில் அடிக்காமல் எதிரிகளை எதிர்த்துப் போராடுவதுதான் எங்களின் பலம்.
  • தேவகவுடாவால் நிற்கவோ, உட்காரவோ முடியாது என்று கேலி செய்பவர்களும் உண்டு.

பெங்களூரு:

பெங்களூருவில் நேற்று ஜனதாதளம் (எஸ்) கட்சி சார்பில் 'ஜனதா மித்ரா' எனும் மக்களை குறை கேட்கும் நிகழ்ச்சி தொடக்க விழா நடைபெற்றது. வீடு, வீடாக சென்று மக்களிடம் குறை கேட்பதும், ஜனதாதளம் (எஸ்) ஆட்சியில் நிறைவேற்றிய திட்டங்களை மக்கள் மத்தியில் எடுத்துக்கூறுவதும் இந்த திட்டத்தின் நோக்கம். இந்த ஜூலை 1-ந்தேதி (நேற்று) முதல் 17-ந்தேதி வரை பெங்களூருவில் உள்ள 28 சட்டசபை தொகுதிகளிலும் நடக்கிறது. 17-ந்தேதி நிறைவு நாளில் பெங்களூருவில் பிரமாண்ட மாநாடு நடக்கிறது. இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு ஜே.பி.பவனில் உள்ள சிறப்பு பூஜை நடந்தது.

இதில் அக்கட்சியின் தேசிய தலைவரும், முன்னாள் பிரதமருமான எச்.டி.தேவகவுடா, அக்கட்சியின் மாநில தலைவர் சி.எம்.இப்ராகிம், மூத்த தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான எச்.டி.குமாரசாமி, கேரள மாநில நிர்வாகி கிருஷ்ணன் குட்டி, எம்.எல்.ஏ. தாமஸ் டி.மேத்யூ உள்பட பலர் கலந்துகொண்டனர். இந்த ஜனதா மித்ரா நிகழ்ச்சியை தேவகவுடா கொடி அசைத்து தொடங்கிவைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

இன்று நல்ல நாள். ஜனதா மித்ரா நிகழ்ச்சியை தொடங்கிவைத்துள்ளேன். இந்த நிகழ்ச்சியில் குமாரசாமி, சி.எம்.இப்ராகிம் உள்பட தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களும், தேர்தலில் போட்டியிடுபவர்களும் வந்துள்ளனர். கேரளாவில் நமது கட்சியின் பெருமையை எடுத்துக்கூறி வரும் கிருஷ்ணன்குட்டியும் இங்கு வந்துள்ளார். முதலில் ஜனதா ஜல்தாரே திட்டத்தை செயல்படுத்தினோம்.

இதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதன்தொடர்ச்சியாக தற்போது ஜனதா மித்ரா திட்டத்தை தொடங்கியுள்ளோம். பெங்களூருவில் வருகிற 17-ந்தேதி வரை இந்த திட்டம் நடைபெறும். நான் முதல்-மந்திரியாக இருந்தபோது பெங்களூருவின் வளர்ச்சிக்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தேன். தேவகவுடா ஒரு கிராமத்துக்காரர், பெங்களூருவுக்கு என்ன செய்ய முடியும் என்று சொல்பவர்களும் உண்டு.

கட்சியை கவிழ்க்க யார் முயன்றாலும் பரவாயில்லை. நான் கட்சியை பலப்படுத்த போராடுவேன். பல முறை கட்சியை அழிக்க சிலர் முயன்றனர். இருப்பினும் கட்சியை காப்பாற்றி இன்றும் கட்சியை வெற்றிகரமாக நடத்தி வருகிறோம். தேவகவுடாவால் நிற்கவோ, உட்காரவோ முடியாது என்று கேலி செய்பவர்களும் உண்டு. அதை பொருட்படுத்தாமல் நான் நூற்றாண்டாக போராடி இன்று கட்சியை வெற்றி பாதையில் அழைத்து சென்று வருகிறேன். இங்குள்ள மக்களைப் பார்த்தால் நமது கட்சியின் பலம் என்னவென்று தெரியும். நெஞ்சில் அடிக்காமல் எதிரிகளை எதிர்த்துப் போராடுவதுதான் எங்களின் பலம். ஜனதா மித்ரா திட்டத்துடன் நான் இருப்பேன். கட்சியை யார் அழிக்க முயன்றாலும், முடியாது. கட்சியை காக்கவும், வெற்றிக்காகவும் நான் தொடர்ந்து போராடுவேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News