திருப்பதியில் விரைவாக தரிசனம் செய்ய ஏ.ஐ. தொழில்நுட்பம் - தேவஸ்தானம் முடிவு
- பக்தர்கள் நுழைவு மற்றும் வெளியேறும் இடங்களில் ஏ.ஐ. தொழில் நுட்ப கண்காணிப்பு கேமராக்கள் நிறுவப்படும்.
- பக்தர்களின் முகங்களைப் பதிவு செய்ய ஏற்கனவே சோதனை ரீதியாக முக அங்கீகாரம் தொழில் நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.
திருப்பதி:
திருப்பதியில் பக்தர்கள் ஏழுமலையானை விரைவாக தரிசனம் செய்ய ஏ.ஐ. தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.
இதன் ஒரு பகுதியாக பக்தர்கள் நுழைவு மற்றும் வெளியேறும் இடங்களில் ஏ.ஐ. தொழில் நுட்ப கண்காணிப்பு கேமராக்கள் நிறுவப்படும்.
இதன் மூலம் நாள் முழுவதும் தரிசனம் செய்ய வரிசையில் நுழையும் பக்தர்கள் மற்றும் சிறப்பு நுழைவு தரிசனம் மற்றும் வரிசையில் தரிசனத்திற்கு நிற்பவர்கள் விவரங்கள் மதிப்பீடு செய்யப்படும்.
இதனால் பக்தர்கள் தரிசன நேரத்தை சரியாக அறிந்து கொள்வார்கள்.
தற்போது ஒரு மணி நேரத்திற்கு எத்தனை பேர் கோவிலுக்கு வருகிறார்கள் என்பது குறித்த அறிவியல் தகவல்கள் தேவஸ்தானத்திலும் இல்லை.
பக்தர்களின் முகங்களைப் பதிவு செய்ய ஏற்கனவே சோதனை ரீதியாக முக அங்கீகாரம் தொழில் நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. ஏ.ஐ. தொழில் நுட்பம் முழுமையாக பயன்படுத்தப்பட்டால் பக்தர்கள் விரைவில் தரிசனம் செய்ய முடியும். இதற்கான ஏற்பாடுகளை தேவஸ்தான அதிகாரிகள் செய்து வருகின்றனர்.
திருப்பதியில் நேற்று 77,579 பேர் தரிசனம் செய்தனர். 34, 064 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.74 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 18 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.