இந்தியா

சொத்துக்காக தந்தையின் இறுதிச்சடங்கை தடுத்த மகள்கள்: 3 நாட்கள் வீட்டிலேயே வைத்திருந்ததால் பரபரப்பு

Published On 2022-11-25 04:38 GMT   |   Update On 2022-11-25 04:38 GMT
  • சொத்துப் பிரச்சினை தொடர்பாக வழக்கு விசாரணை நடந்து வருகிறது.
  • தெரு வாசிகள் கார்வேட்டிநகரம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

ஸ்ரீகாளஹஸ்தி

சித்தூர் மாவட்டம் கார்வேட்டிநகரம் மேற்குத் தெருவைச் சேர்ந்தவர் குருவமந்தடி (வயது 80). இவருக்கு 2 மனைவிகள் உண்டு. முதல் மனைவிக்கு ஒரே ஒரு மகன் மட்டும் உள்ளார். முதல் மனைவி உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததையடுத்து, குருவமந்தடி 2-வதாக மங்கம்மா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு 2 மகள்கள் உண்டு. 2 மகள்களுக்கும் 20 ஆண்டுகளுக்கு முன்பே திருமணமாகி விட்டது. முதல் மனைவியின் மகன் முரளி தனது மனைவியோடு சேர்ந்து, தந்தையின் சொத்தை சித்திக்கு தெரியாமல் தன்னுடைய பெயருக்கு மாற்றி கொண்டதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து மங்கம்மாவின் மகள்கள் நீதி வேண்டி கோர்ட்டை நாடினர். கோர்ட்டில் சொத்துப் பிரச்சினை தொடர்பாக வழக்கு விசாரணை நடந்து வருகிறது.

இந்தநிலையில் குருவமந்தடி உடல்நலம் பாதிக்கப்பட்டு திடீரென உயிரிழந்தார். தனது தந்தை உயிரிழந்த தகவலை கேள்விப்பட்ட 2 மகள்களும் கிராமத்துக்கு வந்தனர். அவர்கள், தந்தையின் சொத்துப் பிரச்சினையைத் தீர்க்கும் வரை தந்தையின் உடலுக்கு இறுதிச்சடங்கு நடத்த விட மாட்டோம், எனக் கூறி தடுத்தனர்.

அதன் காரணமாக உடலை அடக்கம் செய்யாமல் உறவினர்களும், தெருவாசிகளும் கடந்த 3 நாட்களாக குருவமந்தடியின் உடலை வீட்டிலேயே வைத்திருந்தனர். இதனால் கார்வேட்டிநகரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து தெரு வாசிகள் கார்வேட்டிநகரம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் தெருவாசிகள் உதவியோடு நேற்று குருவமந்தடியின் 2 மகள்களுக்கும், மகனுக்கும் இடையே பேச்சு வார்த்தை நடத்தி சமரசம் செய்து வைத்தனர். இதையடுத்து குருவமந்தடியின் உடலுக்கு இறுதிச்சடங்கு நடத்தப்பட்டது.

Tags:    

Similar News