இந்தியா

வாக்குப்பதிவு நடைமுறைகள் குறித்த அனைத்து தகவல்களையும் சமர்பிக்க தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

Published On 2024-04-16 13:20 GMT   |   Update On 2024-04-16 13:21 GMT
  • 10 சதவீத வாக்காளர்கள் எதிர்ப்பு தெரிவித்தால் கூட ஒட்டுமொத்த நடைமுறையையும் நிறுத்த வேண்டும். இது நியாயமா?
  • இதுபோன்ற சிஸ்டத்தை வீழ்த்த முயற்சிக்கக் கூடாது. ஐரோப்பிய நாடுகளின் உதாரணங்கள் இங்கு சரிபட்டு வராது.

இந்தியாவில் EVMs மூலம் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. யாருக்கு வாக்களித்தோம் என்பதை தெரிந்துகொள்ள விவிபாட் முறை பயன்படுத்தப்படுகிறது. ஆனால் விவிபாட் வாக்காளர் யாருக்கு வாக்களித்தார் என்பதை காட்டும். ஆனால் ரசீது வாக்காளரிடம் வழங்கப்படாது. பெட்டிக்குள் சேகரிக்கப்படும்.

EVMs மீது சந்தேகம் எழுப்பும் எதிர்க்கட்சியினர் விவிபாட்டில் உள்ள அனைத்து ரசீதுகளையும் எண்ண வேண்டும் எனத் தெரிவிக்கின்றன. ஆனால், தற்போது ஒரு சட்டமன்ற தொகுதிக்கு ஐந்து விவிபாட் என்ற வகையில் எண்ணப்படுகிறது. ஆனால் தேர்தல் ஆணையம் அனைத்து விவிபாட்டையும் எண்ண முடியாது எனத் தெரிவித்தது.

இந்த நிலையில் வாக்காளர்களுக்கு வாக்களித்ததற்கான ரசீது வழங்க வேண்டும். பின்னர் அந்த ரசீது ஒரு பெட்டியில் சேரிக்கப்பட்டு அது எண்ணப்பட வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

இதற்கிடையே உச்சநீதிமன்றத்தில் இது தொடர்பாக பல பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. இது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

ஜனநாயக சீரமைப்பு சங்கத்தின் சார்பில் ஆஜரான பிரஷாந்த் பூஷன் "நாம் மீண்டும் பழைய நடைமுறையான வாக்குச்சீட்டு முறைக்கு செல்ல முடியும். இல்லையெனில் விவிபாட்டின் ரசீது வாக்காளர்களின் கைக்கு கிடைக்கப் பெற வேண்டும். அதை அவர்கள் வாக்குப்பெட்டியில் செலுத்த வேண்டும். விவிபாட் டிசைன் மாற்றப்பட்டுள்ளது" என்றார். அத்துடன் ஜெர்மனியில் நடைபெறும் தேர்தல் நடைமுறையை உதாரணத்திற்கு கூறினார்.

அதற்கு நீதிபதி திபன்கார் தத்தா, ஜெர்மனியின் மக்கள் தொகை எவ்வளவு என கேட்க, பிரஷாந்த் பூஷன் சுமார் 6 கோடி இருக்கும் என்றார்.

அப்போது நீதிபதி கண்ணா "நமது நாட்டில் 97 கோடி வாக்காளர்கள் உள்ளனர். வாக்குச்சீட்டு மூலம் தேர்தல் நடத்தப்பட்டபோது என்ன நடந்தது என்பது நாம் எல்லோருக்குத் தெரியும்." என்றார்.

அப்போது மூத்த வழக்கறிஞர் சஞ்சய் ஹெக்டே "EVMs விவிபாட் ரசீதுடன் ஒப்பிட்டு சரியாக இருக்கிறதா? எனப் பார்க்க வேண்டும்" என்றார்.

உடனே நீதிபதி கண்ணா "60 கோடி விவிபாட் ரசீதுகள் எண்ணப்பட வேண்டும். சரிதானே?" என்றார்.

மேலும், "இயந்திரம் வழக்கமாக மனிதன் குறிக்கீடு இல்லாமல் சரியான முடிவுகளை கொடுக்கும். மனிதன் குறுக்கிடும்போது அல்லது அங்கீகரிக்கப்படாத மாற்றங்களை (மென்பொருள் மற்றும் இயந்திரம்) செய்யும்போது பிரச்சனை எழுப்பப்படுகிறது. இதை தவிர்க்க ஏதாவது ஆலோசனை இருந்தால் தெரிவிக்கலாம்" என்றார்.

பிரஷாந்த பூசன் "ஒரே சட்டமன்ற தொகுதிக்கு ஐந்து பிவிபாட் இயந்திரத்தில் உள்ள ரசீதுகள் எண்ணப்படுகின்றன. 200 இயந்திரங்களில் இது வெறும் ஐந்து சதம் வீதம்தான். இது நியாயமாக இருக்க முடியாது. ஏழு வினாடி லைட் தவறாக வழி நடத்தப்படலாம். வாக்காளர் விவிபாட் ரசீதை பெற்று, அதை வாக்குப்பெட்டியில் செலுத்த அனுமதிக்க வேண்டும்."

சீனியர் வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயன் "பிராசந்த் பூஷன் தெரிவிக்கும் அனைத்தும் நான் ஏற்றுக் கொள்கிறேன். நாங்கள் கெட்ட எண்ணத்தில் கூறவில்லை. தன்னுடைய வாக்கு போடப்பட்டது என்ற நம்பிக்கை வாக்காளருக்கு ஏற்பட வேண்டும். இது ஒன்றுதான்" என்றார்.

உடனே, உச்சநீதிமன்றம் வாக்களிக்கும் நடைமுறை, EVMs-ன் சேமிப்பு மற்றும் வாக்கு எண்ணப்படுதல் உள்ளிட்ட அனைத்தை தகவல்களையும் தெரிவிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் கேட்டுக்கொண்டது.

நீதிபதி கண்ணா "EVMs இயந்திரத்தை டேம்பரிங் செய்யப்படும் நபருக்கு கடுமையான தண்டனை வழங்கும் வாய்ப்பு இல்லை. இது முக்கியமான விசயம். பயப்படும் வகையில் தண்டனை இருக்க வேண்டும்." என்றார்.

வழக்கறிஞர் சங்கரநாராயணன் "வாக்காளர்கள் ரசீதை பெற்று வாக்குப்பெட்டியில் செலுத்த அனுமதிக்க வேண்டும்" என்றார.

அதற்கு நீதிமன்றம் "10 சதவீத வாக்காளர்கள் எதிர்ப்பு தெரிவித்தால் கூட ஒட்டுமொத்த நடைமுறையையும் நிறுத்த வேண்டும். இது நியாயமா?." என்றது. அதற்கு வழக்கறிஞர் சங்கரநாராயணன் "ஆம், அதைக் கேட்க எனக்கு உரிமை உண்டு. நான் ஒரு வாக்காளர், வேண்டுமென்றே செயல்முறையை நிறுத்துவதால் எனக்கு என்ன லாபம்?" என்றார்.

நீதிபதி திபன்கர் தத்தா வெளிநாட்டை நம்முடைய தேர்தலுடன் ஒப்பிடக் கூடாது என்றார். இது தொடர்பாக அவர் கூறுகையில் "என்னுடைய வீடு மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ளது. ஜெர்மனியை விட மேற்கு வங்காளத்தில் மக்கள் தொகை அதிகம். நாம் ஒன்றின் மீது நம்பிக்கை வைப்பது அவசியம். இதுபோன்ற சிஸ்டத்தை வீழ்த்த முயற்சிக்கக் கூடாது. இதுபோன்ற உதாரணங்களை தெரிவிக்கக் கூடாது. ஐரோப்பிய நாடுகளின் உதாரணங்கள் இங்கு சரிபட்டு வராது" என்றார்.

பிரசாந்த் பூஷனிடம் நீதிபதி திபன்கர் தத்தா, மக்கள் EVMs மீது நம்பிக்கை வைக்கவில்லை என்பதற்கு தரவுகள் உள்ளதா? என கேட்டார். அதற்கு பூஷன் ஆய்வுகளை குறிப்பிட்டார். அதற்கு நீதிபதி திபன்கர் தத்தா "நாங்கள் தனியார் தேர்தல் கணிப்பை நம்பவில்லை. எங்களுக்கு தரவுகள் வேண்டும். தரவுகள் அது உண்மையானதாக இருக்க வேண்டும், ஆனால் கருத்து அடிப்படையில் அல்ல. நாங்கள் தேர்தல் ஆணையத்திடம் இருந்து தரவுகளை பெற இருக்கிறோம்." என்றார்.

அத்துடன் இந்த மனு மீதான விசாரணையை வியாழக்கிழமைக்கு ஒத்திவைத்துள்ளது.

Tags:    

Similar News