இந்தியா

மிசோரம் வாக்கு எண்ணிக்கை: ஆளுங்கட்சிக்கு பின்னடைவு

Published On 2023-12-04 03:08 GMT   |   Update On 2023-12-04 04:11 GMT
  • 40 இடங்களில் 21-ஐ கைப்பற்றும் கட்சி ஆட்சியமைக்கும்.
  • கருத்துக் கணிப்பில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐந்து மாநில சட்டசபை தேர்தல் கடந்த மாதம் 30-ந்தேதியுடன் முடிவடைந்தது. டிசம்பர் 3-ந்தேதி (நேற்று) வாக்குகள் எண்ணப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், தெலுங்கானா மாநிலங்களில் நேற்று வாக்குள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்பட்டது.

மிசோரமில் பெரும்பாலானோர் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர்கள் என்பதால், ஞாயிற்றுக்கிழமை வாக்கு எண்ணிக்கையை அடுத்த நாளுக்கு மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

அவர்களின் கோரிக்கையை ஏற்று இன்று (டிசம்பர் 4-ந்தேதி) வாக்குகள் எண்ணப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று காலை 8 மணிக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு எந்திரங்களின் சீல் நீக்கப்பட்டு வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. மிசோ தேசிய முன்னணி (MNF), சோரம் மக்களின் இயக்கம் (ZPM), காங்கிரஸ் இடையே பலத்த போட்டி நிலவி வருகிறது.

காலை 9.30 மணி நிலவரப்படி ஆளுங்கட்சியான மிசோ தேசிய முன்னணி (எம்.என்.எஃப்) 11 இடங்களில் முன்னிலைப் பெற்றுள்ளது. எதிர்க்கட்சியான சோரம் மக்கள் இயக்கம் 15 இடங்களில் முன்னணி வகித்து வருகிறது.

காங்கிரஸ் 10 இடங்களிலும், பா.ஜனதா ஒரு இடத்திலும் முன்னணி வகிக்கின்றன.

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் 40 இடங்களை கொண்ட மிசோரமில் ஆட்சியமைக்க 21 உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்ற நிலையில், அங்கு ஆளும் மிசோ தேசிய முன்னணி (எம்.என்.எப்.) 14-18 இடங்களும், சோரம் மக்களின் இயக்கம் (இசட்.பி.எம்.) 12-16 இடங்களும், காங்கிரஸ் 8-10 இடங்களும், பா.ஜனதா 0-2 இடங்களும் பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News