null
MGNREGA திட்டத்தில் ஊழல் நடந்தது.. மகாத்மா காந்தி பெயர் நீக்கம் குறித்து மக்களவையில் காரசார விவாதம்
- மகாத்மா காந்தி பெயரை எந்தவொரு திட்டத்திற்கும் சூட்டி அரசியல் செய்யக்கூடாது
- மாநிலங்களின் நிதி அதிகாரத்தைப் பறிக்கும் வகையில் உள்ளது.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் (MGNREGA) பெயரை மாற்றம் செய்து புதிய விதிகளை அறிமுகம் செய்யும் புதிய மசோதா மீதான விவாதம் நேற்றிரவு மக்களவையில் நடைபெற்றது.
மசோதாவின்படி இந்தத் திட்டத்திற்கு விக்சித் பாரத் ரோஜ்கர் மற்றும் ஆஜீவிகா மிஷன் (கிராமின்) என்று பெயரிடப்பட்டுள்ளது. இது சுருக்கமாக VB G RAM G என அழைக்கப்படுகிறது.
மசோதாவைத் தாக்கல் செய்த மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஷிவ்ராஜ் சிங் சவுகான், "இந்தத் திட்டம் கிராமங்களை வறுமையற்றதாக மாற்றும் மற்றும் கிராமங்கள் சுயசார்பு அடைய வேண்டும் என்ற மகாத்மா காந்தியின் கனவை நனவாக்கும்" என்று கூறினார்.
பாஜக எம்.பி அனுராக் தாக்கூர், "புதிய மசோதாவின் கீழ் வேலைவாய்ப்பு உறுதி 100 நாட்களில் இருந்து 125 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், ஊதியம் 15 நாட்களுக்குள் என்பதற்குப் பதிலாக ஒரு வாரத்திற்குள் வங்கி கணக்கில் செலுத்தப்படும்.
எதிர்க்கட்சிகள் பெயர்களைப் பற்றி மட்டுமே கவலைப்படுகின்றன, ஆனால் மோடி அரசு திட்டத்தைச் செயல்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது.
முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் ஊழல் நடந்தது. தற்போது ஜன்தன் கணக்குகள் மற்றும் நேரடி பணப் பரிமாற்றம் மூலம் ஊழல் தடுக்கப்பட்டுள்ளது" என குறிப்பிட்டார்.
மகாத்மா காந்தி, குடியரசுத் தலைவர் அல்லது துணைத் தலைவர் ஆகியோரின் பெயர்களை எந்தவொரு திட்டத்திற்கும் சூட்டி அரசியல் செய்யக்கூடாது என அரசியலமைப்பு விதிகள் கூறுவதாகத் பாஜக எம்.பி நிஷிகாந்த் தூபே தெரிவித்தார்.
திட்டத்தின் பெயரிலிருந்து மகாத்மா காந்தியின் பெயர் நீக்கப்பட்டதற்கு காங்கிரஸ் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.
திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி மகுவா மொய்த்ரா பேசுகையில், மகாத்மா காந்தியின் பெயரை நீக்கியதன் மூலம் அரசு அவரை அவமரியாதை செய்துள்ளது. அவரின் கிராம ராஜ்ய கனவை சிதைத்துள்ளது. அரசு யாரும் வளர்ச்சி அடைய கூடாது என்ற கொள்கையுடன் செயல்படுகிறது என்று பேசினார்.
மாநிலங்களின் நிதி அதிகாரத்தைப் பறிக்கும் வகையிலும், கிராம சபைகளின் உரிமைகளைக் குறைக்கும் வகையிலும் இந்த மசோதா உள்ளதாக காங்கிரஸ் எம்.பி ஜெய் பிரகாஷ் குற்றம் சாட்டினார்.
இந்த மசோதா மீதான விவாதம் இன்றும் (வியாழக்கிழமை) தொடரும் என்றும், அமைச்சரின் பதிலுக்குப் பிறகு மசோதா நிறைவேற்றப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.