பெங்களூரு அரண்மனை அருகே குண்டு வெடிப்பு நடத்த சதி- கைதான ஓட்டல் ஊழியர் பரபரப்பு தகவல்
- ஆட்டோ டிரைவர் உள்ளிட்டோரிடம் போலீசார் விசாரணை நடத்தி தகவல்களை பெற்றுள்ளனர்.
- நகரில் முக்கிய இடத்தில் குண்டு வெடிப்பை நிகழ்த்த சதி நடந்திருப்பதற்கான பரபரப்பு தகவல் தெரியவந்துள்ளது.
பெங்களூரு:
பெங்களூரு சம்பிகேஹள்ளி அருகே தனிச்சந்திராவில் உள்ள ஒரு ஓட்டலில் அப்துல் ரகுமான் (வயது 24) என்பவர் ஊழியராக வேலை செய்தார். அவரிடம், ஆதார் அடையாள அட்டை கொடுக்கும்படி உரிமையாளர் கேட்டு வந்துள்ளார். ஆனால் அப்துல் ரகுமான் கொடுக்காமல் இருந்ததால், அவரது உடைமைகள் இருந்த பையில் சக ஊழியர் ஆதார் அட்டையை தேடிய போது ஒரு கையெறி குண்டு சிக்கி இருந்தது.
கடந்த மாதம் (மார்ச்) 21-ந் தேதி இந்த சம்பவம் நடந்திருந்தது. இதையடுத்து, ஓட்டல் ஊழியர் அப்துல் ரகுமான் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட கையெறி குண்டு செயலிழக்க செய்யப்பட்டது. அதே நேரத்தில் கையெறி குண்டுவின் உதிரி பாகங்கள் தடய அறிவியல் ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டு இருந்தது. கைதான அப்துல் ரகுமானை காவலில் எடுத்து போலீசார் விசாரித்தனர்.
மேலும் மத்திய விசாரணை அமைப்பினர், அப்துல் ரகுமானிடம் தீவிரமாக விசாரித்தார்கள்.
அப்போது பெங்களூரு அரண்மனை மைதானத்தில் வைத்து ஒரு நபர் தன்னிடம் கையெறி குண்டை கொடுத்து, அரண்மனை அருகே உள்ள ஒரு கடையில் வைக்கும்படி கூறியதாக அப்துல் ரகுமான் கூறியுள்ளார். இதன்மூலம் நகரில் முக்கிய இடத்தில் குண்டு வெடிப்பை நிகழ்த்த சதி நடந்திருப்பதற்கான பரபரப்பு தகவல் தெரியவந்துள்ளது.
மேலும் அரண்மனை மைதானத்தில் இருந்து தனிச்சந்திராவுக்கு ராஜண்ணா என்பவர் தான் ஆட்டோவில் அழைத்து சென்றதாகவும், மேலும் 2 பேரின் பெயர்களையும் அப்துல் ரகுமான் கூறியதாக சொல்லப்படுகிறது. அதுபற்றி ஆட்டோ டிரைவர் உள்ளிட்டோரிடம் போலீசார் விசாரணை நடத்தி தகவல்களை பெற்றுள்ளனர். அவர்கள் அப்துல் ரகுமான் பற்றி தங்களுக்கு எதுவும் தெரியாது என கூறியதாக தெரிகிறது.
இதையடுத்து, கையெறி குண்டுவை அப்துல் ரகுமானுக்கு கொடுத்த நபரை பிடிக்க சம்பிகேஹள்ளி போலீசார் மற்றும் மத்திய விசாரணை அமைப்பினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.