நாட்டில் 2 கட்டங்களாக மக்கள் தொகை கணக்கெடுப்பு.. தேதி குறித்த மத்திய அரசு - மக்களவையில் தகவல்
- எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் கேள்விக்கு பதிலளிக்கப்பட்டது.
- மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதி கணக்கெடுப்பும் முடிக்கப்படும்.
மத்திய அரசு 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பை இரண்டு கட்டங்களாக நடத்த திட்டமிட்டுள்ளது.
நாட்டின் 16வது மக்கள் தொகை கணக்கெடுப்பான இது 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பு என்று அழைக்கப்படுகிறது. இது சுதந்திரம் பிறகு நடத்தப்படும்எட்டாவது மக்கள் தொகை கணக்கெடுப்பாகும்.
முதல் கட்டம் 2026 ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலும், இரண்டாம் கட்டம் 2027 பிப்ரவரியிலும் நடைபெறும் என்று மத்திய அரசு செவ்வாய்க்கிழமை மக்களவையில் தெரிவித்துள்ளது.
காங்கிரஸ் எம்.பி.யும் எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தியின் கேள்விக்கு பதிலளித்த மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய், மக்கள் தொகை கணக்கெடுப்பு இரண்டு கட்டங்களைக் கொண்டிருக்கும் என்று கூறினார்.
முதல் கட்டத்தில், வீட்டுப் பட்டியல் மற்றும் வீட்டுக் கணக்கெடுப்பு நடத்தப்படும். இரண்டாம் கட்டத்தில், மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும்.
முதல் கட்டம் 2026 ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை நடத்தப்படும். இரண்டாம் கட்டம் பிப்ரவரி 2027 இல் தொடங்கி மார்ச் 1 இல் முடியும் என்று தெரிவித்துள்ளார்.
மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதி கணக்கெடுப்பும் முடிக்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார்.
மேலும், பல்வேறு அமைச்சகங்கள், துறைகள், அமைப்புகள் மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு தரவு பயனர்களின் பரிந்துரைகளின் அடிப்படையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு கேள்வி படிவங்கள் இறுதி செய்யப்பட்டு வருவதாக அமைச்சர் கூறினார்.
இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு டிஜிட்டல் முறையில் தரவு சேகரிக்கப்பட்டு நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.