பாதுகாப்பு விதிமுறைகளையும் மீறி திருப்பதியில் மாட வீதியில் புகுந்த கார்- அதிகாரிகள் விசாரணை
- ராம் பகிச்சா மெயின் கேட் அருகில் இருந்து மாத வீதிக்கு 4 அடுக்கு பாதுகாப்பை மீறி தான் செல்ல வேண்டும்.
- திருப்பதி தேவஸ்தானத்திற்கு நன்கொடை வழங்க வந்த கார் வழி தவறி மாட வீதிகளில் சென்று இருக்கலாம்.
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் உள்ளதால் 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மேலும் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினால் அதை முறியடிக்கும் விதமாக ஆக்டோபஸ் படையை சேர்ந்தவர்கள் தயார் நிலையில் உள்ளனர்.
இந்த நிலையில் நேற்று சிஎம்ஓ என்ற ஸ்டிக்கர் ஒட்டிய கார் ஒன்று கோவிலில் 4 அடுக்கு பாதுகாப்பையும் மீறி கடந்து மாட வீதி வழியாக புஷ்கரணி நடைபெறும் மண்டபம் வரை சென்றது.
அங்கிருந்து வி.ஐ.பி. மற்றும் வி.வி.ஐ.பி. கார் நிறுத்தும் இடத்திற்கு சென்று நின்றது. அப்போது அங்கு இருந்த சிலர் கார் டிரைவரிடம் விசாரித்தபோது இந்த கார் அமைச்சரின் கார் என்றும் பின்னர் இல்லை வேறு ஒருவருடையது என்றும் தெரிவித்தார். இவ்வளவு பாதுகாப்பு குளறுபடிகள் நடந்தபோதும் பாதுகாப்பு அதிகாரிகள் யாரும் சம்பவ இடத்திற்கு வரவில்லை.
ராம் பகிச்சா மெயின் கேட் அருகில் இருந்து மாத வீதிக்கு 4 அடுக்கு பாதுகாப்பை மீறி தான் செல்ல வேண்டும். விஐபி மற்றும் வி.வி.ஐ.பி.களின் கார்கள் ராம் பகிச்சா எதிரே உள்ள பார்க்கிங் வரை மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. இந்த கார் மட்டும் பாதுகாப்பு விதிகளை மீறி எப்படி மாட வீதிக்கு சென்றது என பக்தர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
ஏற்கனவே கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பலத்த பாதுகாப்பையும் மீறி தனியார் நிறுவனத்தினர் பேடி ஆஞ்சநேயர் கோவிலிலிருந்து ஏழுமலையான் மூலவர் கோபுரம் வரை ட்ரோன் கேமரா மூலம் வீடியோவை பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானதால் பக்தர்கள் மற்றும் வேத பண்டிதர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். ஆகம விதிகளின்படி திருமலையில் ஆளில்லா குட்டி விமானங்கள் பறக்க தடை உள்ள நிலையில் பாதுகாப்பு மீறி வீடியோ எடுத்தது எப்படி, பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளதாக பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டினர்.
இந்த நிலையில் நேற்று மாட விதிகளில் கார் சென்றது குறித்து முதன்மை செயல் அலுவலர் தர்மாரெட்டி கூறுகையில்:-
திருப்பதி தேவஸ்தானத்திற்கு நன்கொடை வழங்க வந்த கார் வழி தவறி மாட வீதிகளில் சென்று இருக்கலாம். பாதுகாப்பு அதிகாரிகள் எப்படி மாட வீதிக்கு காரை அனுமதித்தனர் என்பது குறித்து விசாரணை நடத்தப்படும் என தெரிவித்தார்.