இந்தியா

நிதிஷ்குமார் மந்திரிசபை விரிவாக்கம்- தேஜ்பிரதாப் யாதவ் உள்பட 31 பேர் பதவியேற்றனர்

Published On 2022-08-16 08:06 GMT   |   Update On 2022-08-16 11:16 GMT
  • லல்லு பிரசாத் யாதவின் இன்னொரு மகனும், துணை முதல்-மந்திரி தேஜஸ்வி யாதவின் சகோதரருமான தேஜ்பிரதாப் யாதவும் மந்திரியாக பதவியேற்றார்.
  • பீகார் மந்திரி சபையில் இதுவரை 33 பேர் பொறுப்பு வகித்து வருகிறார்கள்.

பாட்னா:

பீகார் மாநிலத்தில் பா.ஜனதாவுடனான உறவை ஐக்கிய ஜனதாதள தலைவர் நிதிஷ்குமார் துண்டித்தார்.

அவர் ராஷ்டீரிய ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளை கொண்ட மெகா கூட்டணியுடன் மீண்டும் இணைந்தார். அவர்களுடன் சேர்ந்து நிதிஷ்குமார் பீகாரில் புதிய ஆட்சியை அமைத்தார்.

ஐக்கிய ஜனதா தளம்-ராஷ்டீரிய ஜனதா தளம் கூட்டணி அரசு கடந்த 10-ந்தேதி பதவியேற்றது. நிதிஷ் குமார் முதல்-மந்திரியாகவும், தேஜஸ்வியாதவ் துணை முதல்-மந்திரியாகவும் பதவியேற்றனர்.

இந்த நிலையில் ஒரு வாரத்திற்கு பிறகு பீகாரில் ஐக்கிய ஜனதா தளம்-ராஷ்டீரிய ஜனதா தளம் கூட்டணி மந்திரிசபை இன்று விரிவாக்கம் செய்யப்பட்டது.

இந்த மந்திரி சபையில் 36 பேர் வரை மந்திரிகளாக இருக்க உச்சவரம்பு இருக்கிறது. இதில் 31 பேர் இன்று மந்திரிகளாக பதவியேற்றனர். காலை 11.30 மணியளவில் கவர்னர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் கவர்னர் பகுசவுகான் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

லல்லுபிரசாத் யாதவின் ராஷ்டீரிய ஜனதா தளம் கட்சியினரே மந்திரி சபையில் ஆதிக்கம் செலுத்தி உள்ளனர். பதவியேற்ற 31 பேரில் 16 மந்திரிகள் ராஷ்டீரிய ஜனதா தளம் கட்சியை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளத்தை சேர்ந்த 11 எம்.எல்.ஏ.க்களும், காங்கிரஸ் கட்சியில் 2 பேரும், இந்துஸ்தான் அவாம் மோர்ச்சாவை சேர்ந்த ஒருவரும், சுயேட்சையை சேர்ந்த ஒருவரும் மந்திரிகளாக பதவியேற்றனர்.

இந்த மெகா கூட்டணியில் இடம் பெற்று இருந்தாலும் கம்யூனிஸ்டுகள் மந்திரி சபையில் இடம் பெறவில்லை.

லல்லு பிரசாத் யாதவின் இன்னொரு மகனும், துணை முதல்-மந்திரி தேஜஸ்வி யாதவின் சகோதரருமான தேஜ்பிரதாப் யாதவும் மந்திரியாக பதவியேற்றார்.

பீகார் மந்திரி சபையில் இதுவரை 33 பேர் பொறுப்பு வகித்து வருகிறார்கள். புதிய அரசு வருகிற 24-ந்தேதி சட்டசபையில் மெஜாரிட்டி பலத்தை நிரூபிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News