இந்தியா

அயோத்தி ராமர் கோவில்: ராமர், சீதை சிலைகள் செய்ய நேபாளத்தில் இருந்து சாளக்கிராம கற்கள் வருகை

Published On 2023-02-04 12:05 GMT   |   Update On 2023-02-04 12:05 GMT
  • சாளக்கிராம கற்கள் இமயமலை அருகே உள்ள கண்டகி நதியில் மட்டுமே உற்பத்தியாக கூடியவை.
  • ராமர் சிலையானது 5 அடியில் இருந்து 5.5 அடிக்குள் இருக்கும்படி செதுக்கப்படுகிறது.

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. ராமர் கோயில் 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்குள் தயாராகிவிடும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. 60 சதவீதத்திற்கும் மேலான பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், கோவில் கருவறையில் வைக்கப்படும் ராமர் - சீதை சிலைகளை தயாரிக்கும் பணி விரைவில் தொடங்க உள்ளது.

கருவறையில் வைக்கப்படும் சிலைகள் என்பதால்... எதிர்மறை எண்ணங்களை அகற்றி, ஐஸ்வர்யம் பெருக செய்து.. நேர்மறை அதிர்வுகளை தரக்கூடிய புனித கற்களான சாளக்கிராம கற்களில் சாமி சிலைகளை செதுக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

இன்னும் சொல்லப்போனால் விஷ்ணுவின் சக்தியை உள்ளிடக்கிய கல் தான் இந்த சாளக்கிராம கல் என நம்புகிறார்கள் இந்துக்கள். பூஜிக்க உகந்த இந்த கற்கள் இமயமலை அருகே உள்ள கண்டகி நதியில் மட்டுமே உற்பத்தியாக கூடியவை. இதனால் தான் அயோத்தி ராமர் சிலையை செதுக்க சாளக்கிராம கற்களை தேர்ந்தெடுத்துள்ளனர்.

சீதையின் பிறப்பிடமாக அறியப்படும் நேபாளத்தின் ஜனக்பூரில் இருந்து லாரி மூலம் அயோத்திக்கு புனித கற்கள் கொண்டு வரப்பட்டன. முன்னதாக நேபாள மக்கள் பயபக்தியுடன் கற்களுக்கு பூஜை செய்து வழியனுப்பி வைத்தனர். இந்த கற்களில் ஒரு கல் 18 டன் எடையிலும், மற்றொரு கல் 16 டன் எடையிலும் உள்ளன.

ராமர் சிலையானது 5 அடியில் இருந்து 5.5 அடிக்குள் இருக்கும்படி செதுக்கப்படுகிறது. ராம நவமி நாளில் சூரியனின் கதிர்கள் நேரடியாக ராமரின் நெற்றியில் விழும் வகையில் சிலையின் உயரம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. கோவில் கட்டுமான பணி நடைபெற்று வரும் அயோத்தியில் சிலைகள் செதுக்கும் பணியும் நடைபெறும்.

Tags:    

Similar News