ஆந்திராவில் குட்டையில் மூழ்கி பள்ளி மாணவர்கள் 6 பேர் பலி
- சிறுவன் ஒருவன் ஆழமான பகுதிக்கு சென்று தண்ணீரில் மூழ்கினார்.
- சிறுவர்களின் சத்தத்தை கேட்ட மாடு மேய்த்து கொண்டு இருந்தவர்கள் ஓடி வந்து சிறுவர்களை மீட்க முயன்றனர்.
ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் அஸ்பாரி அடுத்த சிகிரியை சேர்ந்தவர்கள் பீமேஷ், வினய், மஹபூப் பாஷா, சாய் கிரண், சேஷிகுமார், கின்னெரா சாய். இவர்கள் அங்குள்ள அரசு பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தனர்.
நேற்று மாலை பள்ளி முடிந்ததும் பள்ளிக்கு அருகில் உள்ள குட்டையில் குளிக்கச் சென்றனர். 6 சிறுவர்களும் அரட்டை அடித்தபடி குளித்துக் கொண்டு இருந்தனர். அப்போது சிறுவன் ஒருவன் ஆழமான பகுதிக்கு சென்று தண்ணீரில் மூழ்கினார்.
அவரைக் காப்பாற்ற ஒருவர் பின் ஒருவராக சென்ற 6 மாணவர்களும் தண்ணீரில் மூழ்கி உயிருக்கு போராடியபடி சத்தம் போட்டனர்.
சிறுவர்களின் சத்தத்தை கேட்ட மாடு மேய்த்து கொண்டு இருந்தவர்கள் ஓடி வந்து சிறுவர்களை மீட்க முயன்றனர். அதற்குள் சிறுவர்கள் அனைவரும் தண்ணீரில் மூழ்கி இறந்தனர்.
பின்னர் கிராம மக்கள் ஒன்று திரண்டு வந்து 6 சிறுவர்களின் பிணங்களையும் மீட்டனர். பள்ளியில் படிக்கச் சென்ற தங்களது பிள்ளைகள் பிணமாக கிடப்பதை கண்டு அவர்களது பெற்றோர்கள் கதறி துடித்தது கல்நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது.