இந்தியா

திருவனந்தபுரத்தில் அமீபிக் மூளைக்காய்ச்சலுக்கு இளம்பெண் உயிரிழப்பு

Published On 2025-11-21 12:25 IST   |   Update On 2025-11-21 12:25:00 IST
  • திருவனந்தபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வினயா சேர்க்கப்பட்டார்.
  • வினயாவுக்கு தொற்று பரவியதற்கான மூலக்காரணம் தெரியவில்லை.

திருவனந்தபுரம்:

கேரள மாநிலத்தில் கோழிக்கோடு உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அமீபிக் மூளைக்காய்ச்சல் பரவ தொடங்கியது. தேங்கியிருக்கும் அசுத்தமான தண்ணீரில் குளிக்கும் நபர்களுக்கு, அதில் இருக்கக்கூடிய அமீபா நாசி மற்றும் காது துவாரம் வழியாக சென்று மூளையை தாக்குவதால் அமீபிக் மூளைக்காய்ச்சல் வருகிறது.

இதனால் தேங்கியிருக்கும் அசுத்தமான தண்ணீரின் குளிப்பதை தவிர்க்க வேண்டும் என்று பொதுமக்களுக்கு மாநில சுகாதாரத்துறை அறிவுறுத்தியது. மேலும் நோய் தடுப்பு நடவடிக்கைகளில் சுகாதாரத்துறை தீவிரமாக ஈடுபட்டது. இருந்தபோதிலும் அமீபிக் மூளைக்காய்ச்சல் பரவல் கட்டுக்குள் வரவில்லை.

இந்த நோய் தொற்றுக்கு உயிர்பலியும் ஏற்பட்டதால் மக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டது. இந்தநிலையில் அமீபிக் மூளைக்காய்ச்சலுக்கு மாநில தலைநகரான திருவனந்தபுரத்தில் இளம்பெண் ஒருவர் பலியாகி விட்டார்.

திருவனந்தபுரம் நெடுமங்காடு பகுதியை சேர்ந்தவர் வினயா (வயது26). இவருக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற அவர், சில நாட்களில் குணமடைந்து வீடு திரும்பினார்.

அப்போது அவருக்கு வலிப்பு ஏற்பட்டது. இதையடுத்து திருவனந்தபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வினயா சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு ரத்த பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு அமீபிக் மூளைக் காய்ச்சல் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.

இதையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. வென்டிலேட்டர் சிகிச்சையில் இருந்து வந்த அவர் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு பரிதாபமாக இறந்தார். திருவனந்தபுரம் அரசு ஆஸ்பத்திரியில் தொடர்ந்து 40 நாட்கள் சிகிச்சையில் இருந்தநிலையில், சிகிச்சை பலனின்றி வினயா இறந்து விட்டார்.

வினயாவுக்கு தொற்று பரவியதற்கான மூலக்காரணம் தெரியவில்லை. அவர் அவருடைய வீட்டில் இருந்த கிணற்று தண்ணீரையே பயன்படுத்தி இருக்கிறார். இதனால் அவரது வீட்டின் கிணற்று நீர் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு உள்ளது.

கேரள மாநி லத்தில் அமீபிக் மூளைக்காய்ச்சலுக்கு இந்த ஆண்டு இதுவரை 170 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 40 பேர் பலியாகி விட்டனர். மாநிலத்தில் இந்த மாதத்தில் அமீபிக் மூளைக்காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்ற 17 பேரில் 7 பேர் இறந்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News