இந்தியா

முடிவுக்கு வந்த 400 மணி நேர போராட்டம்: சுரங்கத்தில் சிக்கிய 41 தொழிலாளர்கள் பத்திரமாக மீட்பு

Published On 2023-11-28 15:16 GMT   |   Update On 2023-11-28 15:16 GMT
  • மீட்கப்பட்டவர்களிடம் முதல் மந்திரி புஷ்கர் சிங் தாமி கலந்துரையாடினார்.
  • தொழிலாளர்கள் மீட்கப்பட்டதும் அப்பகுதி மக்கள் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

உத்தரகாசி:

உத்தரகாண்ட் மாநிலத்தில் உத்தரகாசி மாவட்டத்தின் சில்க்யாரா மலைப்பகுதியில் 4.50 கிலோமீட்டர் தூரத்துக்கு மலைக்கு கீழ் சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடந்துவந்தது.

கடந்த 12-ம் தேதி நடந்த சுரங்கப்பாதை விபத்தில் தொழிலாளர்கள் 41 பேர் சிக்கிக் கொண்டனர். தொடர்ந்து இன்று 17-வது நாளாக மீட்புப் பணி நடைபெற்றது. இன்று மாலை தொழிலாளர்களை மீட்க துளையிடும் பணி நிறைவடைந்தது. இதனால் அவர்களது உறவினர்கள் சுரங்கத்தில் குவிந்தனர்.

இதற்கிடையே, ஒவ்வொரு தொழிலாளராக பத்திரமாக மீட்கப்பட்டனர். அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை வழங்கப்பட உள்ளது. மீட்கப்பட்ட தொழிலாளர்கள் ஆம்புலன்ஸ் மூலம் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

மீட்புப் பணிகளை முதல் மந்திரி புஷ்கர் சிங் தாமி நேரில் சென்று பார்வையிட்டார். மீட்கப்பட்டவர்களிடம் முதல் மந்திரி கலந்துரையாடினார்.

இந்நிலையில், சுரங்கத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களும் பத்திரமாக மீட்கப்பட்டனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

மீட்கப்பட்ட தொழிலாளர்களை மத்திய மந்திரி வி.கே.சிங் வரவேற்றார்.

தொழிலாளர்கள் மீட்கப்பட்டதும் அப்பகுதி மக்கள் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

Tags:    

Similar News