இந்தியா

நூபுர் சர்மா தலையை துண்டிப்பவருக்கு வீடு பரிசு தருவதாக அறிவித்த மதகுரு கைது

Published On 2022-07-06 04:37 GMT   |   Update On 2022-07-06 04:37 GMT
  • நூபுர் சர்மா தனது கருத்துக்கு தொலைக்காட்சியில் தோன்றி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
  • இன்று அதிகாலை போலீசார் மதகுரு சல்மான் சிஷ்டியை கைது செய்தனர்.

அஜ்மீர்:

டெல்லி பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் நூபுர் சர்மா கடந்த மாதம் இறைதூதர் நபிகள் நாயகத்திற்கு எதிராக தெரிவித்த கருத்து விமர்சனம், சர்ச்சையை ஏற்படுத்தியது. அவரை எதிர்த்து நாடு முழுவதும் வழக்குகள் தொடரப்பட்டு உள்ளன.

அவரை கண்டித்து பல்வேறு நகரங்களில் போராட்டங்களும் நடந்தன. நூபுர் சர்மா தனது கருத்துக்கு தொலைக்காட்சியில் தோன்றி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

இந்தநிலையில் கடந்த திங்கட்கிழமை ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் தர்கா மதகுரு சல்மான் சிஷ்டி நபிகள் நாயகத்திற்கு எதிராக கருத்து தெரிவித்த பா.ஜனதா முன்னாள் செய்தி தொடர்பாளர் நூபுர் சர்மாவை விமர்சித்து ஒரு வீடியோவை வெளியிட்டார். அதில் அவர், "நூபுர் சர்மாவின் தலையை துண்டித்து என்னிடம் கொண்டு வருபவர்களுக்கு என் வீட்டை பரிசாக கொடுப்பேன்" என்று கூறி இருந்தார்.

இந்த வீடியோ நேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடினார்கள். அப்போது அவர் தலைமறைவாகி விட்டது தெரிந்தது.

அவரை பிடிக்க தனிப்படைகள் உருவாக்கப்பட்டன. விசாரணையில் அவர் பதுங்கியிருந்த இடம் போலீசாருக்கு தெரிய வந்தது. இன்று அதிகாலை 2 மணி அளவில் போலீசார் அந்த வீட்டை சுற்றி வளைத்து மதகுரு சல்மான் சிஷ்டியை கைது செய்தனர்.

பிறகு அவரை ஆள்வார் கேட் போலீசார் ரகசிய இடத்துக்கு கொண்டு சென்று விசாரித்தனர். அவரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்து உள்ளனர்.

இதற்கிடையே அஜ்மீர் தர்கா நிர்வாகத்தினர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் மதகுரு சல்மான் சிஷ்டியின் கருத்துக்கும், தர்காவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று தெரிவித்து உள்ளனர். அந்த வீடியோவில் சல்மான் சிஷ்டி போதையில் இருப்பது தெரிய வந்துள்ளது.

மது அருந்திவிட்டு அவர் அந்த வீடியோவை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் கண்டனம் தெரிவித்து உள்ளன.

Tags:    

Similar News