டெல்லி சட்டசபை முன்பு அதிஷி தலைமையில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் போராட்டம்
- ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் 12 பேர் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.
- நாட்டின் வரலாற்றில் இது போன்று ஒருபோதும் நடந்தது இல்லை.
புதுடெல்லி:
டெல்லி சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் கடந்த 24-ந் தேதி தொடங்கியது. அன்று எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்றனர். 2-வது நாளான நேற்று முன்தினம் அமளியில் ஈடுபட்ட ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் 12 பேர் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.
முதல்-மந்திரி அலுவலகத்தில் இருந்து அம்பேத்கர், பகத்சிங் புகைப்படங்கள் அகற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டதால் சபாநாயகர் நடவடிக்கை எடுத்தார்.
இந்த நிலையில் டெல்லி சட்டசபை முன்பு அதிஷி தலைமையில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். சட்டசபை வளாகத்துக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டதாக கூறி அவர்கள் அம்பேத்கர் படத்துடன் முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இதுகுறித்து முன்னாள் முதல் மந்திரியும், எதிர்க் கட்சி தலைவருமான அதிஷி கூறியதாவது:-
ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் டெல்லி சட்டமன்ற வளாகத்துக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரிகள் கூறினார்கள். சபாநாயகரின் உத்தரவின் பேரில் எங்களை சட்டமன்ற வளாகத்துக்குள் போலீசார் அனுமதிக்கவில்லை.
நாங்கள் (ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள்) சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளோம். எனவே சட்டசபை வளாகத்தில் நுழைய கூட அனுமதிக்கமாட்டோம் என்று போலீசார் தெரிவித்தனர்.
நாட்டின் வரலாற்றில் இது போன்று ஒருபோதும் நடந்தது இல்லை. எங்களை எப்படி தடுக்க முடியும்? சபாநாயகரிடம் பேச முயற்சித்தோம். ஆனால் எதுவும் நடக்கவில்லை.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
பா.ஜ.க. எம்.எல்.ஏ. சதீஷ் உபத்யாய் கூறும் போது, 'சபை சட்டப்படி இயங்கும் எதிர்க்கட்சி கள் அவையில் கூச்சல், குழப்பங்களையும் ஏற்படுத்தினால் சபாநாயகர் ஒரு முடிவை எடுப்பார். சபாநாயகர் எடுக்கும் முடிவு இறுதியானது என்றார்.