யுனெஸ்கோ உலக அங்கீகார பட்டியலில் இடம் பிடித்த திருப்பதி மலை.
திருப்பதியில் உள்ள 7 மலைகள் உலக அங்கீகார பட்டியலில் சேர்ப்பு
- திருப்பதி 7 மலைகளுக்கு உலக அங்கீகாரம் கிடைத்திருப்பது பக்தர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
- பக்தர்களுக்கு தங்கும் அறைகள் கிடைக்காமல் திறந்த வெளியில் உணவு சாப்பிட்டு உறங்குகின்றனர்.
திருப்பதி மலைகள் மற்றும் பீமிலி சிவப்பு மணல் திட்டுகளின் இயற்கை பாரம்பரியம் உட்பட நாட்டில் உள்ள 7 இடங்கள் உலக பாரம்பரிய அங்கீகாரத்திற்காக யுனெஸ்கோவால் தயாரிக்கப்பட்ட தற்காலிக பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.
திருப்பதியில் ஏழுமலையான் வசித்த 7 மலைகளான சப்தகிரிகள் விஷ்ணு பகவான் ஓய்வெடுத்த ஆதிசேஷனின் 7 பாதங்கள், அந்த 7 மலைகள், சேஷாத்ரி, நிலாத்ரி, கருடாத்ரி அஞ்சனாத்ரி, விருஷபாத்ரி, நாராயணாத்ரி மற்றும் வெங்கடாத்ரி ஆகியவை புனிதமாக கருதப்படுகிறது.
ஒவ்வொரு அடியிலும் புனிதம் தெளிவாகத் தெரியும். திருப்பதி மலைகளில் உள்ள ஒவ்வொரு மலைக்கும் சொந்த வரலாறு உள்ளது.
ஆன்மீகத்தையும் இயற்கை அழகையும் இணைக்கும் திருப்பதி மலைகள் பல்லுயிர் பெருக்கத்திற்கு ஒரு புகலிடமாகும். அவை அரிய தாவர மற்றும் விலங்கு இனங்களின் தாயகமாகும். இங்குள்ள காலநிலை பன்முகத்தன்மை கொண்டது.
திருப்பதி 7 மலைகளுக்கு உலக அங்கீகாரம் கிடைத்திருப்பது பக்தர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
திருப்பதி கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. காத்திருப்பு அறைகள் நிரம்பி வழிந்தன.
திருப்பதி கோவிலில் இருந்து கிருஷ்ணதேஜா விருந்தினர் மாளிகை வரை பக்தர்கள் தரிசனத்திற்காக வரிசையில் காத்திருந்தனர்.
பக்தர்களுக்கு தங்கும் அறைகள் கிடைக்காமல் திறந்த வெளியில் உணவு சாப்பிட்டு உறங்குகின்றனர். இந்த நிலையில் நேற்று இரவு முதல் திருப்பதியில் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது.
இதனால் ஜில்லென்று குளிர்ந்த காற்று வீசுகிறது. வரிசையில் தரிசனத்திற்கு காத்திருக்கும் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை கடும் அவதி அடைந்தனர்.
திருப்பதியில் நேற்று 82, 149 பேர் தரிசனம் செய்தனர். 36,578 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர்.ரூ.3.85 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 18 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.