இந்தியா

கொரோனாவுக்கு மேலும் 5 பேர் உயிரிழப்பு - சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 4 ஆயிரத்தை கடந்தது

Published On 2025-06-04 08:02 IST   |   Update On 2025-06-04 08:02:00 IST
  • நோய்த்தொற்று பரவலில் 3-வது இடத்தில் இருந்த டெல்லி நேற்று 4-வது இடத்துக்கு வந்துவிட்டது.
  • தமிழ்நாட்டில் நேற்று முன்தினம் 189 பேர் சிகிச்சையில் இருந்தனர். இது நேற்று 215 ஆக உயர்ந்தது.

புதுடெல்லி:

கொரோனாவின் புதுவகை தொற்று நாட்டில் வேகமாக பரவி வருகிறது. அதன்படி நேற்று முன்தினம் 3 ஆயிரத்து 961 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தனர். இந்த எண்ணிக்கை நேற்று 4 ஆயிரத்து 26 ஆக உயர்ந்தது. மாநிலங்கள் வாரியாக பரவலை கணக்கிடும்போது, கேரளாவே இன்னும் அதிக பாதிப்பில் இருக்கிறது. 1,416 பேர் அங்கு சிகிச்சை பெறுகிறார்கள். இந்த எண்ணிக்கை நேற்று முன்தினத்தைவிட 19 குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு அடுத்தபடியாக மகாராஷ்டிரத்தில் 494 பேர் சிகிச்சை பெறுகிறார்கள். அங்கு நேற்று முன்தினத்தைவிட 12 குறைந்து இருக்கிறது.

நோய்த்தொற்று பரவலில் 3-வது இடத்தில் இருந்த டெல்லி நேற்று 4-வது இடத்துக்கு வந்துவிட்டது. அங்கு நேற்றுமுன்தினம் 483 பேர் சிகிச்சையில் இருந்தனர். இந்த எண்ணிக்கை நேற்று 90 குறைந்து 393 ஆகி விட்டது. தமிழ்நாட்டில் நேற்று முன்தினம் 189 பேர் சிகிச்சையில் இருந்தனர். இது நேற்று 215 ஆக உயர்ந்தது. நேற்று முன்தினத்தைவிட 26 பேர் கூடுதலாக சிகிச்சை பெறுகிறார்கள்.

பலி எண்ணிக்கையை பொறுத்தவரை கடந்த ஜனவரி 1-ந் தேதியில் இருந்து இதுவரை 37 பேர் இறந்திருக்கிறார்கள். நேற்று முன்தினம் 32 ஆக இருந்த மொத்த உயிர்ப்பலி நேற்று மேலும் 5 சேர்ந்து 37 ஆகி விட்டது. ஒரே நாளில் 5 பேர் உயிரிழந்து உள்ளனர்.

கேரளாவில் 80 வயது முதியவர், மகாராஷ்டிர மாநிலத்தில் 70 வயதுக்கு மேற்பட்ட 2 மூதாட்டிகள், தமிழ்நாட்டில் 69 வயது மூதாட்டி, மேற்கு வங்காளத்தில் 43 வயது பெண் என 5 பேர் இறந்திருக்கிறார்கள்.

Tags:    

Similar News