ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தல்- செப்.18 முதல் அக்.1 வரை 3 கட்ட வாக்குப்பதிவு
- ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட நிலையில் நடைபெறும் முதல் தேர்தல்.
- வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 4ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு.
அரியானா, மகாராஷ்டிரா, ஜார்கண்ட் மற்றும் ஜம்மு-காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் விரைவில் பதவிக்காலம் முடியவுள்ள நிலையில். சட்டசபை தேர்தல் நடைபெறும் தேதிகள் அறவிக்கப்படுவதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
அதன்படி, ஜம்மு காஷ்மீர், அரியானா மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஜம்மு காஷ்மீரில் உள்ள 90 சட்டசபை தொகுதிகளுக்கு, 3 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, முதற்கட்டமாக செப்டம்பர் 18ம் தேதியும், 2ம் கட்டமாக செப்டம்பர் 25ம் தேதியும், 3ம் கட்டமாக அக்டோபர் 1ம் தேதியும் தேர்தல் நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் அறிவித்துள்ளார்.
ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பின்னர் முதல் முறையாக சட்டப்சபை தேர்தல் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும், ஜம்மு மற்றும் காஷ்மீரில் உள்ள 90 சட்டசபைத் தொகுதிகளில் 74 பொது மற்றும் 16 இடஒதுக்கீடு (எஸ்டி - 9, எஸ்சி - 7) ஆகியவற்றுக்கு தேர்தல் நடைபெறுகிறது.
87 லட்சத்துக்கும் அதிகமான வாக்காளர்கள் ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தலில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர். இறுதி வாக்காளர் பட்டியல் ஆகஸ்ட் 20ம் தேதி வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரியானாவில் உள்ள 90 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக அக்டோபர் 1ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
ஜம்மு காஷ்மீர், அரியானா ஆகிய மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 4ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.