இந்தியா

உத்தரகாண்ட்டில் வன்முறை: 4 பேர் பலி- ஊரடங்கு உத்தரவு அமல்

Published On 2024-02-09 02:31 GMT   |   Update On 2024-02-09 02:31 GMT
  • நீதிமன்றத்தின் உத்தரவுப்படி கட்டங்களை இடிக்க சென்றபோது அதிகாரிகள் மீது தாக்குதல்.
  • வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது. 50 போலீசார் காயம் அடைந்துள்ளனர்.

உத்தரகாண்ட் மாநிலம் ஹர்த்வானியில் உள்ள வான்புல்புரா பகுதியில் மதராசா மற்றும் அதையொட்டி கட்டப்பட்ட மசூதி ஆகியவை முறைகேடாக கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் நீதிமன்றம் உத்தரவுப்படி நகராட்சி அதிகாரிகள் அந்த கட்டடத்தை இடிக்க முடிவு செய்தனர். கட்டடங்களை இடிப்பதற்காக அதிகாரிகள் போலீஸ் பாதுகாப்புடன் சம்பவ இடத்திற்கு சென்றனர். அவர்கள் புல்டோசர் மூலம் இடிக்க முயன்றபோது, அங்குள்ளவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இருந்தபோதிலும் அதிகாரிகள் இடிக்கும் பணியை தொடங்கியது. இதனால் வன்முறை வெடித்தது.

இந்த வன்முறையில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். 250 பேர் காயம் அடைந்துள்ளனர். ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வன்முறையாளர்களை கண்டதும் சுட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இணைய தள சேவை முடக்கப்பட்டுள்ளது. பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தின் உத்தரவுபடி அதிகாரிகள் போலீஸ் பாதுகாப்புடன் ஹல்த்வானியின் வான்புல்புரா பகுதியில் கட்டடத்தை இடிக்க முயன்றபோது, பதற்றம் நிலவியது. அங்கு கூடியிருந்தவர்கள் போலீசார், அதிகாரிகள், நகராட்சி ஊழியர்கள் மீது கல்வீசு தாக்குதல் நடத்தியுள்ளனர். போலீசார் கண்ணீர் புகைக்குண்டு வீசியுள்ளனர். இந்த சம்பவத்தில் 50 போலீசார், பல அதிகாரிகள் காயம் அடைந்துள்ளனர்.

இருந்தபோதிலும் போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டு முறைகேடாக கட்டப்பட்ட மதராசா மற்றும் மசூதி இடிக்கப்பட்டுள்ளது. இதனால் பெண்கள் உள்பட அங்கு வசித்து வந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போலீசார் அமைத்திருந்த தடுப்பை இடித்து தள்ளியதுடன் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அதன்பின் சூழ்நிலை அத்துமீறி வன்முறையாக வெடித்துள்ளது. வன்முறையில் 20-க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்கள், பேருந்து ஒன்றுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக நேற்று உத்தரகாண்ட் உயர்நீதிமன்றம் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், நீதிமன்றம் தடை ஏதும் விதிக்கவில்லை. இது தொடர்பாக வருகிற 14-ந்தேதி விசாரணை நடத்தப்படும் எனத் தெரிவித்தது.

Tags:    

Similar News