பயங்கரவாதிகளுடன் தொடர்பில் இருந்த காஷ்மீர் டாக்டர் பதுக்கி வைத்திருந்த 2500 கிலோ வெடிமருந்து சிக்கியது
- ஜம்மு-காஷ்மீர் டாக்டரின் லாக்கரில் துப்பாக்கி, வெடிபொருள் கண்டுபிடிக்கப்பட்டது.
- அவர் கொடுத்த தகவலின்பேரல் அரியானாவில் 2500 கிலோ ஆர்.டி.எக்ஸ். வெடிமருந்து சிக்கியது.
ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் துணை ராணுவப் படையினர் மற்றும் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக செயல்பட்டதாக ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த அதீல் அகமது ராதர் என்பவரை போலீசார் கைது செய்தனர். இவர் டாக்டர் ஆவார்.
காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள டாக்டர் அதீல் அகமதுவுக்கு சொந்தமான லாக்கரில் போலீசார் சோதனை நடத்தினார்கள். அங்கு பதுக்கி வைத்திருந்த ஏ.கே.47 ரக துப்பாக்கி மற்றும் பிற வெடிபொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து அவரிடம் போலீசார் துருவி துருவி விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர் தீவிரவாதிகளுடன் சதித் திட்டத்தில் ஈடுபட்டு இந்தியாவில் பல இடங்களில் தாக்குதல் நடத்துவதற்காக ஆர்.டி.எக்ஸ். வெடிமருந்துகளை பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது.
இந்த வெடிமருந்துகளை அரியானா மாநிலம் பரீதாபாத்தில் பதுக்கி வைத்திருந்ததாக டாக்டர் அதீல் அகமது ராதர் தெரிவித்தார். இதையடுத்து அவர் சொன்ன இடத்துக்கு சென்று போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு 300 கிலோ ஆர்.டி.எஸ். வெடிமருந்து பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது. இது சக்தி வாய்ந்த வெடிமருந்து ஆகும். அதை போலீசார் பறிமுதல் செய்தனர். கைதான டாக்டர் அதீல் அகமது தற்போது போலீஸ் காவலில் உள்ளார்.
இந்தியாவை தகர்ப்பதற்காக ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களை சேமித்து வைப்பதிலும், ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு கொண்டு செல்வதிலும் அதீல் அகமது முக்கிய பங்காற்றி உள்ளார். இது தொடர்பாக அவரிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
போலீசாரின் தீவிர விசாரணையில் புல்வாமா மாவட்டத்தில் உள்ள கோவில் பகுதியை சேர்ந்த முசாமில் ஷகீல் என்ற மற்றொரு டாக்டருக்கும் இதில் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இவர் வாடகைக்கு இருந்த வீட்டில் 2563 கிலோ வெடிபொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சமீப ஆண்டுகளாகவே காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிகளில் அவ்வப்போது வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன. அங்கு பறிமுதல் செய்யப்பட்டுள்ள வெடிமருந்துகளை விட தற்போது கைப்பற்றி இருப்பது அதிகம் ஆகும். இந்த நிலையில் டாக்டர்கள் அதீல் அகமது, முகாமில் ஷகீல் ஆகிய 2 பேரையுமே போலீசார் காவலில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த 2 டாக்டர்களும் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளான ஜெய்ஷ்-இ-முகமது மற்றும் கஸ்வத்-உல்-ஹிந்த் ஆகிய அமைப்புகளுடன் தொடர்பு வைத்திருப்பதாக சந்தேகம் ஏற்பட்டுள்ளது. கைதான டாக்டர்களுக்கு வேறு யாருடன் எல்லாம் தொடர்பு இருக்கிறது என்பது தொடர்பான விசாரணை தீவிரப்படுத் தப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீருக்கு வெளியே அரியானா பகுதியில் வெடிபொருட்கள், ஆயுதங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதால் இந்த விவகாரத்தில் மேலும் பலர் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாகவும், இன்னும் பதுக்கி வைக்கப்பட்டுள்ள வெடி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட வாய்ப்பு இருப்பதாகவும் போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துஉள்ளன.