இந்தியா
ஐ.பி.எல். இறுதி ஆட்டத்தில் சூதாட்டம்

ஒவ்வொரு பந்துக்கும் லட்சக்கணக்கில் பந்தயம்: ஐ.பி.எல். இறுதி ஆட்டத்தில் சூதாட்டம்- 17 பேர் கைது

Published On 2022-05-31 12:41 GMT   |   Update On 2022-05-31 12:41 GMT
ஆந்திர மாநிலம் சித்தூரில் பந்துக்கு பந்து பணம் கட்டி சூதாட்டத்தில் ஈடுபட்ட 17 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பதி:

ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டம் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நேற்று முன்தினம் நடந்தது.

இறுதி ஆட்டத்தின் போது ஆந்திர மாநிலம் சித்தூரில் பந்துக்கு பந்து பணம் கட்டி சூதாட்டம் நடைபெறுவதாக சித்தூர் டி.எஸ்.பி சுதாகர் ரெட்டிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

தகவலின்பேரில் டிஎஸ்பி சுதாகர் ரெட்டி இன்ஸ்பெக்டர் எத்தியேந்திரா மற்றும் போலீசார் பால திரிபுரசுந்தரி கோவில் அருகே உள்ள மைதானத்திற்கு சென்றனர். அங்கு 40-க்கும் மேற்பட்ட வாலிபர்கள் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர்.

போலீசாரை கண்டதும் வாலிபர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். அவர்களை போலீசார் விரட்டிச் சென்று 14 பேரை மடக்கிப் பிடித்தனர். கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட பணம் ரூ.4 லட்சத்து 20 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். அவர்கள் ஓவர்களில் வீசப்படும் ஒவ்வொரு பந்துக்கும் லட்சக்கணக்கில் பந்தயம் கட்டி சூதாட்டம் ஆடியது தெரியவந்தது.

இதேபோல் பெணுமூரு மண்டலம் புலிகுண்ட சிவன் கோவில் அருகே ஒரு கும்பல் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்ற போது போலீசாரை கண்டதும் சூதாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தப்பி ஓடினர்.

இதில் 3 பேரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.3.20 லட்சத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 12 செல்போன்களை பறிமுதல் செய்தனர்.

கைது செய்யப்பட்ட 17 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News