இந்தியா
கைது

மத்தியபிரதேசத்தில் ரூ.700 கோடி ஜி.எஸ்.டி. வரி மோசடி- 5 பேர் கைது

Published On 2022-05-30 13:29 IST   |   Update On 2022-05-30 13:29:00 IST
மத்திய பிரதேசத்தில் ரூ.700 கோடி ஜி.எஸ்.டி. வரி மோசடி தொடர்பாக 5 பேரை போலீசார் கைது செய்தனர். 500 போலி நிறுவனங்களை உருவாக்கி, ஆவணங்கள், முகவரிகள், அடையாள அட்டைகளை போலியாக தயாரித்துள்ளனர்.
போபால்:

ஜி.எஸ்.டி. வரி செலுத்துவதில் முறைகேடுகளை தடுக்க அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறர்கள். போலி ரசீது மூலம் சிலர் மோசடியில் ஈடுபடுவது குறித்து புகார்கள் வந்ததையடுத்து ஜி.எஸ்.டி. வரி அதிகாரிகள் அடிக்கடி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் மத்திய பிரதேசத்தில் ரூ.700 கோடி ஜி.எஸ்.டி. வரி மோசடி தொடர்பாக 5 பேரை போலீசார் கைது செய்தனர். 500 போலி நிறுவனங்களை உருவாக்கி, ஆவணங்கள், முகவரிகள், அடையாள அட்டைகளை போலியாக தயாரித்துள்ளனர்.

இந்த போலி நிறுவனங்கள் மூலம் போலியான ஆவணங்களை பயன்படுத்தி ரூ.700 கோடிக்கு மேல் ஜி.எஸ்.டி. வரி மோசடியில் ஈடுபட்டனர். பல்வேறு செல்போன் எண்களுடன் இணைக்கப்பட்ட டிஜிட்டல் கணக்குகள் மூலம் பரிவர்த்தனைகளை நடத்தியது தெரியவந்தது.

இந்தூரில் உள்ள மத்திய ஜி.எஸ்.டி வரி கமிஷன் மற்றும் மத்திய பிரதேச போலீசின் சைபர் பிரிவு ஆகியவற்றின் கூட்டு விசாரணையில் இந்த மிகப்பெரிய மோசடி அம்பலமானது. மோசடி தொடர்பாக 5 பேர் குஜராத் மாநிலம் சூரத்தில் கைது செய்யப்பட்டனர்.

இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஷித்கான் கூறும்போது, ‘மோசடியில் ஈடுபட்டவர்கள் வழக்கமான வங்கி சேவைகளை தவிர்ப்பதற்காக பல டிஜிட்டல் வாலட் கணக்குகள் மூலம் பரிவர்த்தனைகளை செய்துள்ளனர்.

சோதனையின்போது சூரத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் இருந்த கட்டிடத்தில் போலி நிறுவனங்களின் செல்போன்களின் சிம் கார்டுகள், ஆவணங்கள் லெட்டர் பேடு, முத்திரைகள் ஆகியவை கைப்பற்றப்பட்டன. கைதான அனைவரும் பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்தியவர்கள்’ என்றார்.
Tags:    

Similar News