இந்தியா
சித்தராமையா

நான் எப்போதும் கன்னட காவல்காரன்: சித்தராமையா

Published On 2022-04-30 03:45 GMT   |   Update On 2022-04-30 03:45 GMT
தாய்மொழி என்றால் நமது உணர்வு, உறவு, கலாசாரம், வரலாறு, நிலம், நீர், வளம் என எல்லாவற்றையும் உள்ளடக்கியது. இந்தியை ஆதரிப்பவர்களுக்கு இது தெரிய வேண்டும் என்று சித்தராமையா தெரிவித்துள்ளார்.
பெங்களூரு:

கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா பாகல்கோட்டையில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

கன்னட மொழி அரசியலுக்கு பயன்படுத்தப்படுவது அல்ல. இது நமது வாழ்க்கையின் உயிர். ஆங்கிலம், இந்தி உள்பட அனைத்து மொழிகள் மீதும் மரியாதை உள்ளது. இவை அனைத்தும் வேண்டும். இந்த மொழிகளால் கிடைக்கும் ஞானமும் வேண்டும். ஆனால் கன்னடத்திற்கு தான் முதல் முன்னுரிமை. தாய்மொழியை பூஜிக்கிறோம். கூட்டாட்சி தத்துவம் கொண்ட நாடு இந்தியா.

மாநிலங்கள் மொழி அடிப்படையில் பிரிக்கப்பட்டன. கன்னடம் தாய்மொழி மட்டுமின்றி சுற்றுச்சூழல் மொழியும் கூட. மாநில மொழிகளை அரசியல் சாசனம் அங்கீகரித்துள்ளது. அரசியல் சாசனத்தையே எதிர்க்கும் தேச துரோகிகளுக்கு இந்த குறைந்தபட்ச அறிவு இருக்க வேண்டும். தாய்மொழி என்றால் நமது உணர்வு, உறவு, கலாசாரம், வரலாறு, நிலம், நீர், வளம் என எல்லாவற்றையும் உள்ளடக்கியது. இந்தியை ஆதரிப்பவர்களுக்கு இது தெரிய வேண்டும்.

மந்திரி முருகேஷ் நிரானி, ரமேஷ் ஜிகஜினகி எம்.பி., சி.டி.ரவி எம்.எல்.ஏ. ஆகியோர் டெல்லியில் உள்ள தங்களின் தலைவர்களை திருப்திப்படுத்த இந்தியை ஆதரித்து பேசுகிறார்கள். அவர்களுக்கு தாய்மொழி மீது பற்று இல்லை. நான் எப்போதும் கன்னட காவல்காரன்.

பன்மதங்கள், பன்மொழிகள், பன்கலாசாரத்தை ஏற்றுக்கொண்ட கட்சி காங்கிரஸ். ஆனால் ஒரு மதம், ஒரு கலாசாரம், ஒரு மொழி என்று சொல்வது மக்கள் விரோத கொள்கை. இது அரசியல் சாசனத்திற்கு எதிரானது. இந்தியை ஆதரிக்கும் பா.ஜனதாவை கன்னடர்கள் ஒருமித்த குரலுடன் எதிர்க்க வேண்டும். கன்னட சினிமா தேசிய அளவில் வெற்றிகரமாக ஓடுகிறது. இதை இந்தி திரையுலகத்தால் சகித்து கொள்ள முடியவில்லை.

இவ்வாறு சித்தராமையா கூறினார்.
Tags:    

Similar News