இந்தியா
மம்தா பானர்ஜி

மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி 29-ந்தேதி டெல்லி பயணம்

Published On 2022-04-24 05:12 GMT   |   Update On 2022-04-24 05:12 GMT
மம்தா பானர்ஜி மத்தியில் ஆளும் பா.ஜனதா அரசை கடுமையாக எதிர்த்து வருகிறார். 2024-ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் மோடியை வீழ்த்த அவர் எதிர்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
புதுடெல்லி:

டெல்லியில் வருகிற 30-ந்தேதி முதல்- மந்திரிகள் மற்றும் ஜகோர்ட்டு நீதிபதிகள் பங்கேற்கும் மாநாடு நடக்கிறது. 6 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் இந்த மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.

இந்த மாநாட்டில் மாநில முதல்-மந்திரிகள் மற்றும் நீதிபதிகள் கலந்து கொள்ள உள்ளனர்.

இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக மேற்கு வங்க முதல்- மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி வருகிற 29-ந்தேதி டெல்லி செல்கிறார்.

இந்த பயணத்தின் போது அவர் பிரதமர் மோடியை தனியாக சந்தித்து பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது அவர் பல்வேறு வி‌ஷயங்கள் குறித்து பிரதமருடன் ஆலோசனை நடத்துகிறார். மத்திய அரசு தொகுப்பில் இருந்து மாநில அரசுக்கு வழங்கவேண்டிய 90ஆயிரம் கோடியை உடனடியாக விடுவிக்குமாறு அவர் வலியுறுத்துவார்.

மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே நல்லுறவு குறித்தும் அவர் விவாதிப்பார் என திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர் தெரிவித்தார். மம்தா பானர்ஜி உறவினரான அபிஷேக் பானர்ஜிக்கு எதிரான பணபரிவர்த்தனை தொடர்பாக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது.

இது தொடர்பாக மம்தா பானர்ஜி மாநில அரசுக்கு எதிராக மத்திய அரசு அதிகாரிகள் எடுத்து வரும் நடவடிக்கைள் குறித்தும் விவாதிப்பார் என திரிணாமுல் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

மம்தா பானர்ஜி மத்தியில் ஆளும் பா.ஜனதா அரசை கடுமையாக எதிர்த்து வருகிறார். 2024-ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் மோடியை வீழ்த்த அவர் எதிர்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். இந்த சூழ்நிலையில் அவர் டெல்லியில் மோடியை சந்தித்து பேச திட்டமிட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News