இந்தியா
மழை

கேரளாவில் 20-ந்தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

Published On 2022-04-16 10:01 IST   |   Update On 2022-04-16 10:01:00 IST
கேரளாவில் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்து இருப்பதால் மாநிலம் முழுவதும் பேரிடர் மீட்பு படையினர் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
திருவனந்தபுரம்:

கேரளா முழுவதும் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது.

குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையையொட்டியுள்ள பகுதிகளில் பலத்த மழை கொட்டுகிறது. இதனால் கேரளாவின் மலையோர மாவட்டங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

இதற்கிடையே கேரளாவில் வருகிற 20-ந் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கேரளாவில் தற்போது பெய்து வரும் கோடை மழை தொடர்ந்து பெய்யும். 20-ந் தேதி வரை மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலையோர பகுதிகளில் மழையின் தாக்கம் அதிகமாக இருக்கும். அங்கு இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

மழையின் காரணமாக கடலில் சூறைக்காற்று வீசும். மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும். இதனால் கடலுக்கு செல்லும் மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். மேலும் கடல் கொந்தளிப்பாகவும், அலைகள் சீற்றத்துடனும் காணப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கேரளாவில் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்து இருப்பதால் மாநிலம் முழுவதும் பேரிடர் மீட்பு படையினர் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

மலையோர மாவட்டங்களில் மக்கள் இரவு நேர பயணத்தை தவிர்க்குமாறு கூறப்பட்டுள்ளது.

Similar News