இந்தியா
அரசு பஸ்சை வழிமறித்து நிற்கும் காட்டுயானை

மூணாறு அருகே பயணிகளுடன் சென்ற அரசு பஸ்சை வழிமறித்த ஒற்றை காட்டு யானை

Published On 2022-04-06 04:51 GMT   |   Update On 2022-04-06 07:16 GMT
மூணாறு அருகே காட்டு பாதையில் பஸ் சென்று கொண்டிருந்தபோது திடீரென ஒற்றை யானை சாலையின் குறுக்கே வந்தது. அதனை கண்டதும் டிரைவர் பஸ்சை நிறுத்தினார்.
திருவனந்தபுரம்:

கேரளாவின் மலையோர கிராமமான மூணாறுக்கு அடர்ந்த காடுகள் வழியாக செல்ல வேண்டும்.

இச்சாலையில் வாகனங்கள் செல்லும்போது அடிக்கடி வனவிலங்குகள் அவற்றை வழிமறிப்பது வழக்கம். குறிப்பாக யானைகள் கூட்டம் கூட்டமாக வந்து வாகனங்களை வழிமறித்து அட்டகாசம் செய்வதுண்டு. இதற்கு பயந்து இரவு நேரங்களில் யாரும் இந்த வழியாக செல்வது இல்லை.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த வழியாக மூணாறுக்கு கேரள அரசு பஸ் ஒன்று சென்றது. அதில் ஏராளமான பயணிகள் இருந்தனர்.

காட்டு பாதையில் பஸ் சென்று கொண்டிருந்தபோது திடீரென ஒற்றை யானை ஒன்று சாலையின் குறுக்கே வந்தது. அதனை கண்டதும் டிரைவர் பஸ்சை நிறுத்தி விட்டார்.

பஸ் நின்றதும், யானை பஸ்சின் முன்பக்கம் வந்து தும்பிக்கையை உயர்த்தி வழிமறித்தது. பின்னர் பஸ்சை மெதுவாக சுற்றி வந்தது. இதனை கண்டு பஸ்சுக்குள் இருந்த பயணிகள் பீதியில் நடுங்கினர்.

பஸ்சை வழிமறித்த யானை பின்னர் மெல்ல மெல்ல நடந்து பஸ்சின் பின்புறம் சென்றது. அப்போது டிரைவர் பஸ்சை மெதுவாக முன்னோக்கி நகர்த்தினார். மீண்டும் யானை திரும்புவதற்குள், டிரைவர் பஸ்சை மின்னல் வேகத்தில் ஓட்டி சென்றார்.

இந்த காட்சிகள் அனைத்தையும் பஸ்சில் இருந்த பயணிகள் செல்போனில் படம் பிடித்தனர். பின்னர் அதனை சமூக வலைதளத்தில் பதிவிட்டனர். தற்போது இந்த காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.


இதையும் படியுங்கள்...இந்தியாவில் புதிதாக 1,086 பேருக்கு கொரோனா- தினசரி பாதிப்பு சற்று அதிகரிப்பு
Tags:    

Similar News