இந்தியா
இடதுசாரி தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்ட பேரணி

பொது வேலைநிறுத்தத்திற்கு எதிராக உத்தரவு பிறப்பித்த கேரள அரசு

Published On 2022-03-28 22:27 IST   |   Update On 2022-03-28 22:27:00 IST
வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கேரள அரசு ஊழியர்கள் மீது மாநில அரசு நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி, வழக்கறிஞர் ஒருவர் ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.
கொச்சி:

மத்திய அரசின் பொருளாதார கொள்கைகள் மற்றும் திட்டங்களுக்கு எதிராக தொழிற்சங்கங்கள் போராடி வருகின்றன. மத்திய அரசை கண்டித்து நாடு முழுவதும் மத்திய தொழிற்சங்கங்கள் இன்றும், நாளையும் பொது வேலை நிறுத்த போராட்டத்துக்கு அழைத்து விடுத்தன. அதன்படி இன்று போராட்டம் தொடங்கியது.

மத்திய தொழிற்சங்கங்களின் இந்த ‘பாரத் பந்த்’ காரணமாக பல மாநிலங்களில் பகுதி வாரியான பாதிப்பு இருந்தது. வங்கி சேவையில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டது. கேரளாவிலும் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியின் தொழிற்சங்கங்கள் போராட்டத்தில் பங்கேற்றதால், மாநில அரசு பஸ்கள் எதுவும் இயங்கவில்லை. டாக்சிகள், ஆட்டோக்கள் மிக குறைந்த அளவில் இயக்கப்பட்டன. இதனால் அலுவலகம் செல்பவர்கள் பெரிதும் சிரமத்துக்கு உள்ளானார்கள். தொழிற்சாலைகள் முற்றிலும் செயல்படாமல் போனது.

இந்நிலையில், வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கேரள அரசு ஊழியர்கள் மீது மாநில அரசு நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி, வழக்கறிஞர் ஒருவர் ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட், பாரத் பந்த் போராட்டத்தில், அரசு ஊழியர்கள் ஈடுபடுவதை தடுக்க மாநில அரசு உடனடியாக உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டது.

இதனையடுத்து, வேலைநிறுத்தத்தில் பங்கேற்கும் அரசு ஊழியர்கள் எந்த காரணமும் இல்லாமல் பணிக்கு வராத வகையில் அங்கீகரிக்கப்படாத ஆப்சென்டாக கருதப்படும் என்று அரசு அறிவித்தது.

மத்திய அரசின் கொள்கைகளுக்கு எதிராக அழைப்பு விடுக்கப்பட்ட முதல் நாள் பொது வேலைநிறுத்தத்தில் தீவிரமாகப் பங்கேற்ற ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் எதிர்க்கட்சியான காங்கிரசுடன் இணைந்த தொழிற்சங்கங்களுக்கு, இந்த உத்தரவு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

Similar News