இந்தியா
ஆஷிஷ் மிஸ்ரா

லக்கிம்பூர் வன்முறை- ஆஷிஷ் மிஸ்ராவின் ஜாமீன் உத்தரவுக்கு எதிராக அப்பீல்

Published On 2022-02-21 11:23 GMT   |   Update On 2022-02-21 13:48 GMT
குற்றத்தின் கொடூரமான தன்மையைக் கருத்தில் கொள்ளாமல் ஜாமீன் வழங்கப்பட்டிருப்பதாக அப்பீல் மனுவில் கூறி உள்ளனர்.
புதுடெல்லி:

உத்தர  பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரியில் கடந்த அக்டோபர் மாதம் 3ம் தேதி போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது பாஜகவினர் சென்ற கார் மோதியதாலும், அதன்பின்னர் நடந்த வன்முறையாலும் மொத்தம் 8 பேர் கொல்லப்பட்டனர். விவசாயிகள் மீது காரை ஏற்றிய சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 

விவசாயிகள் கொல்லப்பட்டது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விபத்து குறித்த வீடியோ ஆதாரங்களின் அடிப்படையில் மத்திய மந்திரி அஜய் மிஷ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா, ஆஷிஷ் பாண்டே லவகுஷா ராணா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். வழக்கை விசாரித்த லக்கிம்பூர் நீதிமன்றம் ஆஷிஷ் மிஸ்ராவுக்கு ஜாமீன் வழங்க மறுத்துவிட்டது. அதன்பின்னர் அலகாபாத் நீதிமன்றம் அவருக்கு சமீபத்தில் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

இந்நிலையில் ஆஷிஷ் மிஸ்ராவின் ஜாமீன் உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினர் சார்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

ஜாமீன் வழக்கில், நீதிமன்றத்திற்கு அரசு சார்பில் சரியான பயனுள்ள வாதங்களை முன்வைக்காததால், ஜாமீன் உத்தரவை நிறுத்தி வைக்க வேண்டும் என மனுவில் கூறி உள்ளனர். குற்றத்தின் கொடூரமான தன்மையைக் கருத்தில் கொள்ளாமல் ஜாமீன் வழங்கப்பட்டிருப்பதாகவும் கூறி உள்ளனர்.
Tags:    

Similar News