இந்தியா
வாக்குப்பதிவு

உத்தரகாண்டில் 65 சதவீத வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Published On 2022-02-15 10:06 IST   |   Update On 2022-02-15 10:16:00 IST
பிரதமர் மோடி, மத்திய மந்திரிகள் மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் உத்தரகாண்டில் பிரசாரத்தில் ஈடுபட்டதால் மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
டேராடூன்:

70 சட்டசபை தொகுதிகளை கொண்ட உத்தரகாண்ட் மாநிலத்தில் நேற்று ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. காலை 7 மணிக்கு அங்கு ஓட்டுப்பதிவு தொடங்கியது.

பெரும்பாலான தொகுதிகளில் வாக்காளர்கள் காலையிலேயே வாக்குச்சாவடிக்கு வந்து விட்டனர். இதனால் உத்தரகாண்ட் தேர்தல் ஓட்டுப்பதிவு எதிர்பார்த்ததை விட அதிக விறுவிறுப்புடன் காணப்பட்டது.

மொத்தம் 623 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இந்த மாநிலத்தில் 81 லட்சத்து 72 ஆயிரத்து 173 வாக்காளர்கள் உள்ளனர். இவர்கள் வாக்களிப்பதற்கு வசதியாக 11 ஆயிரத்து 697 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஓட்டுப்பதிவை சுமூகமாக நடத்துவதற்காக 36 ஆயிரம் போலீசாரும், துணைநிலை ராணுவத்தினரும் குவிக்கப்பட்டனர்.

ஆளும் பா.ஜ.க.வுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் இடையே ஆட்சியைக் கைப்பற்ற நேரடி போட்டி நிலவுகிறது. ஆம் ஆத்மி கட்சி களத்தில் இருந்தாலும் அது கணிசமான வாக்குகளைப் பிரிக்கும் என்று கூறப்படுகிறது.

காங்கிரஸ் தலைவர்களில் பிரியங்கா மட்டுமே தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். அவர் மிக கடுமையாக பா.ஜ.க.வை தாக்கிப் பேசினார். அவருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் மோடியின் பிரசாரம் அமைந்திருந்தது.

கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக காணொலி காட்சிகள் மூலமாகவும் பிரசாரம் நடைபெற்றது. பா.ஜ.க.வினர் வீடு வீடாக சென்று பிரசாரம் செய்திருந்தனர். எனவே மீண்டும் உத்தரகாண்ட்டில் ஆட்சியை கைப்பற்ற முடியும் என்று நம்பிக்கையுடன் உள்ளனர்.

காலை 9 மணி நிலவரப்படி 5.15 சதவீதமும், முற்பகல் 11 மணி நிலவரப்படி 18.97 சதவீதமும், மதியம் 1 மணி நிலவரப்படி 35.21 சதவீத வாக்குகளும் பதிவாகின.

இந்நிலையில், இறுதி நிலவரப்படி உத்தரகாண்டில் 65.1 சதவீத வாக்குகள் பதிவானது என மாநில தலைமை தேர்தல் அதிகாரி அதிகாரப்பூர்வமாக தெரிவித்தார்.

Similar News