இந்தியா
ஆதித்யநாத்

கடந்த 5 ஆண்டு கால பா.ஜனதா ஆட்சியில் உத்தரபிரதேசத்தில் எந்தவொரு கலவரமும் ஏற்படவில்லை: ஆதித்யநாத்

Published On 2022-02-14 11:44 IST   |   Update On 2022-02-14 13:47:00 IST
பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலும் பொதுமக்கள் ஆசியுடன் இரட்டை என்ஜின் ஆட்சி மீண்டும் ஆட்சிக்கு வருகிறது என ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
லக்னோ:

உத்தரபிரதேச மாநிலத்தில் இன்று 2-ம் கட்ட ஓட்டுப்பதிவு நடந்து வருகிறது.

இந்த நிலையில் அம்மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது:-

உத்தரபிரதேச சட்டசபை தேர்தலில் 300-க்கும் மேற்பட்ட தொகுதிகளை பா.ஜனதா கைப்பற்றும் என்ற நம்பிக்கை உள்ளது. கடந்த 5 ஆண்டு கால பா.ஜனதா ஆட்சியில் உத்தரபிரதேசத்தில் எந்தவொரு கலவரமும் ஏற்படவில்லை.

ஏராளமான வளர்ச்சி திட்ட பணிகள் மற்றும் புதிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. பொதுமக்களின் வளர்ச்சிக்காக பா.ஜனதா அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. எங்களது ஆட்சியில் 80 சதவீத பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் உள்ளனர். 20 சதவீதம் பேர்தான் எல்லாவற்றையும் எதிர்ப்பதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகின்றனர்.

எக்ஸ்பிரஸ் சாலை, மாவட்டத்துக்கு ஒரு மருத்துவக் கல்லூரி என்ற திட்டத்துக்குக்கூட அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். உத்தரபிரதேசத்தில் நடந்த முதல் கட்ட தேர்தலுக்கு பிறகு சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கட்சி, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கலக்கத்தில் உள்ளன.

பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலும் பொதுமக்கள் ஆசியுடன் இரட்டை என்ஜின் ஆட்சி மீண்டும் ஆட்சிக்கு வரும். பொருளாதார மேம்பாடு மற்றும் ஏழைகளின் முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. மாநில அரசின் மக்கள் நலத்திட்டங்களுக்கு பாராட்டுகள் கிடைத்து வருகின்றன.



இந்தியாவின் அரசியலை பிரதமர் மோடி மாற்றி அமைத்து அமைத்துள்ளார். சாதி, மதம், குடும்பம் என்ற அரசியலுக்கு பதிலாக வளர்ச்சி, நல்லாட்சி, கிராமங்களின் முன்னேற்றம், ஏழைகள், இளைஞர்கள், பெண்கள் முன்னேற்றத்துக்காக அவர் பல்வேறு தொலைநோக்கு திட்டங்களை வகுத்து அதன் படி உத்தரபிரதேசத்தில் வளர்ச்சிப் பணிகள் நடந்துள்ளன.

பா.ஜனதாவின் இந்த அர்ப்பணிப்பு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனால் மீண்டும் பா.ஜனதா ஆட்சிக்கு வருவதில் எந்த மாற்றமும் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News