இந்தியா
ஸ்வப்னா சுரேஷ்

தங்க கடத்தல் வழக்கில் சிக்கிய ஸ்வப்னாவின் ஆடியோ பதிவு குறித்து சி.பி.ஐ. விசாரணை

Published On 2022-02-10 05:36 GMT   |   Update On 2022-02-10 05:36 GMT
கேரளாவில் தங்க கடத்தல் வழக்கை விசாரித்து வரும் அமலாக்க துறை ஸ்வப்னாவின் ஆடியோ குறித்து சி.பி.ஐ. விசாரணை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி உள்ளது.
திருவனந்தபுரம்:

திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகத்திற்கு கடந்த 2019-ம் ஆண்டு வந்த பார்சலில் தங்கம் கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

இது தொடர்பாக அமலாக்கத்துறை, சுங்க துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பின்னர் தூதரக முன்னாள் ஊழியர் மற்றும் ஸ்வப்னா சுரேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

ஸ்வப்னாவுடன் தொடர்பில் இருந்ததாக கேரள மாநில மூத்த ஐ.ஏ.எஸ்.அதிகாரி சிவசங்கரும் கைதானார். பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட அவர் தனது சுயசரிதையை புத்தகமாக வெளியிட்டார். அதில் ஸ்வப்னா பற்றி பல தகவல்களை கூறியிருந்தார்.

இதற்கிடையே ஸ்வப்னாவும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். வெளியே வந்த அவர் இந்த வழக்கில் கேரள முதல் மந்திரி பினராயி விஜயனை சிக்க வைக்க முயற்சி நடந்ததாக கூறியிருந்தார். இது தொடர்பான ஆடியோ வெளியானதை அடுத்து கேரள அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து இந்த வழக்கை விசாரித்து வரும் அமலாக்க துறை ஸ்வப்னாவின் ஆடியோ குறித்து சி.பி.ஐ. விசாரணை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி உள்ளது.

இது தொடர்பாக கொச்சியில் உள்ள அமலாக்க துறையின் இணை இயக்குனர் டெல்லி தலைமையகத்துக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.

Tags:    

Similar News