இந்தியா
அமித் ஷா

இசட் பிளஸ் பாதுகாப்பை ஏற்றுக்கொள்ளுங்கள்- ஒவைசிக்கு அமித் ஷா வேண்டுகோள்

Published On 2022-02-07 15:00 IST   |   Update On 2022-02-07 15:00:00 IST
ஒவைசியின் கார் மீதான துப்பாக்கி சூடு தொடர்பாக மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா இன்று பாராளுமன்றத்தில் விளக்கம் அளித்தார்.
புதுடெல்லி:

ஐதராபாத் எம்.பி.யும், ஏ.ஐ.எம்.ஐ.எம்., கட்சித் தலைவருமான அசாதுதீன் ஒவைசி, உத்தர பிரதேச மாநிலம்  மீரட்டில் பிரசாரம் செய்துவிட்டு டெல்லி திரும்பியபோது, அவரது வாகனம் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதில் அவரது காரை இரண்டு புல்லட்டுகள் துளைத்தன. இந்த தாக்குதலில் அதிர்ஷ்டவசமாக அவர் உயிர்தப்பினார். 

இச்சம்பவம் தொடர்பாக மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா இன்று பாராளுமன்றத்தில் விளக்கம் அளித்தார். நடந்த சம்பவம் மற்றும் விசாரணை குறித்து பேசிய அவர், தாக்குதல் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாக கூறினார்.

‘அசாதுதீன் ஒவைசிக்கு ஹாபூர் மாவட்டத்தில் திட்டமிடப்பட்ட எந்த நிகழ்ச்சியும் இல்லை, அவரது வருகை குறித்த எந்த தகவலும் மாவட்ட கட்டுப்பாட்டு அறைக்கு முன்பே அனுப்பப்படவில்லை. தாக்குதல் சம்பவத்திற்குப் பிறகு, அவர் டெல்லிக்கு பத்திரமாக வந்தார். 

தாக்குதல் சம்பவத்திற்கு பிறகு ஒவைசிக்கு போதுமான அளவுக்கு பாதுகாப்பு வழங்க அரசு முடிவு செய்தது. ஆனால், ஒவைசி பாதுகாப்பை விரும்பவில்லை. எனினும், அவரது பாதுகாப்பு கருதி, டெல்லியில் புல்லட் புரூப் கார், இசட் பிரிவு பாதுகாப்பு அளிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசு வழங்கும் பாதுகாப்பை அவர் ஏற்குமாறு கேட்டுக்கொள்கிறேன்’ என்றும் அமித்  ஷா குறிப்பிட்டார்.

Similar News