இந்தியா
டிஜிட்டல் கரன்சியை பணமாக மாற்றிக்கொள்ள முடியும்- பிரதமர் மோடி பேச்சு
மத்திய வங்கி டிஜிட்டல் கரன்சியின் தொடக்கமானது டிஜிட்டல் பணம் செலுத்துதல் மற்றும் ஆன்லைன் நிதி பரிமாற்றம் ஆகியவற்றை மிகவும் பாதுகாப்பானதாகவும் ஆபத்து இல்லாததாகவும் மாற்றும் என பிரதமர் மோடி கூறினார்.
புதுடெல்லி:
இந்தியாவில் ரிசர்வ் வங்கி மூலம் டிஜிட்டல் கரன்சி அறிமுகம் செய்யப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. பிளாக்செயின் தொழில்நுட்பம் உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி உருவாக்கப்பட உள்ள இந்த டிஜிட்டல் கரன்சி, நாட்டின் பொருளாதாரத்திற்கு மிகப்பெரிய உந்துசக்தியாக அமையும் என்று மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
இந்நிலையில், பாஜக சார்பில் நடைபெற்ற சுயசார்பு பொருளாதார கருத்தரங்கில பேசிய பிரதமர் மோடி, டிஜிட்டல் கரன்சியை பணமாக மாற்றிக்கொள்ள முடியும் என்றார்.
“டிஜிட்டல் கரன்சி என்பது நமது தாள் வடிவிலான ரூபாயின் டிஜிட்டல் வடிவமாக இருக்கும். அத்துடன் ரிசர்வ் வங்கியால் கட்டுப்படுத்தப்படும். இது டிஜிட்டல் கரன்சியுடன் தற்போதுள்ள கரன்சியை பரிமாற்றம் செய்யும் ஒரு அமைப்பாகவும் இருக்கும். மத்திய வங்கி டிஜிட்டல் கரன்சி (சிபிடிசி) டிஜிட்டல் பொருளாதாரத்தை வலுப்படுத்தும். யாராவது டிஜிட்டல் கரன்சியில் பணம் செலுத்தினால், அதை பணமாக மாற்றிக்கொள்ள முடியும்.
சிபிடிசி-யின் தொடக்கமானது டிஜிட்டல் பணம் செலுத்துதல் மற்றும் ஆன்லைன் நிதி பரிமாற்றம் ஆகியவற்றை மிகவும் பாதுகாப்பானதாகவும் ஆபத்து இல்லாததாகவும் மாற்றும். மேலும், இது உலகளாவிய டிஜிட்டல் பணம் செலுத்தும் முறைகளின் வளர்ச்சியை எளிதாக்கும். டிஜிட்டல் கரன்சி புதிய வாய்ப்புகளை உருவாக்குவதன் மூலம், நிதி தொழில்நுட்பத் துறையில் புரட்சியை ஏற்படுத்தும். பணத்தை கையாளுதல், அச்சிடுதல், மேலாண்மை ஆகியவற்றில் சுமையை குறைக்கும்” என்றார் பிரதமர் மோடி.
இதையும் படியுங்கள்... இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 25 கோவில்களுக்கு கும்பாபிஷேகம்