செய்திகள்
கட்டுமான பணி

மறு உத்தரவு வரும் வரை கட்டுமான பணிகளுக்கான தடை தொடரும் -டெல்லி அரசு அறிவிப்பு

Published On 2021-11-29 11:47 GMT   |   Update On 2021-11-29 11:47 GMT
கட்டுமான பணிகளுக்கு தடை விதிக்கப்பட்டதால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு தலா ரூ. 5,000 நிதியுதவி வழங்கப்படும் என்று முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:

தலைநகர் டெல்லியில் காற்று மாசைக் கட்டுப்படுத்த அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. முதலில் நவம்பர் 21-ம் தேதி வரை கட்டுமானம், இடிப்பு பணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. அரசுத் துறைகளின் ஊழியர்கள் வீட்டிலிருந்து 100 சதவீதம் வேலை செய்யவேண்டும் என அறிவிக்கப்பட்டது. பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. 
 
மேலும், வாகனங்களால் ஏற்படும் புகையின் அளவை குறைக்கும் வகையில் டெல்லி நகருக்குள் 26-ம் தேதி வரை லாரிகள் நுழைய தடை விதிக்கப்பட்டது. எனினும் காற்றின் தரம் எதிர்பார்த்த அளவிற்கு சீரடையவில்லை. எனவே, டெல்லி மற்றும் தேசிய தலைநகர் பிராந்தியத்தில் (என்சிஆர்) கட்டுமானப் பணிகளுக்கு உச்ச நீதிமன்றம் மீண்டும் தடை விதித்தது. உச்ச நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து கட்டுமானப் பணிகள் மற்றும் கட்டுமான இடிப்பு நடவடிக்கைகளுக்கு மீண்டும் தடை விதிக்கப்பட்டது.  



எனினும், காற்று மாசு தொடர்ந்து மோசமான நிலையிலேயே இருப்பதால்  கட்டுமானப் பணிகள் மற்றும் கட்டுமான இடிப்பு நடவடிக்கைகளுக்கான தடையானது, மறு உத்தரவு வரும் வரை தொடர்ந்து நீடிக்கும் என டெல்லி சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய் இன்று அறிவித்தார். அதேசமயம், பிளம்பிங் வேலை, உட்புற அலங்காரம், மின்சார வேலை மற்றும் தச்சு வேலை போன்ற மாசுபடுத்தாத கட்டுமான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்று கூறினார். 

அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடுத்தப்படும் லாரிகள் தவிர்த்து பிற லாரிகள் நுழைவதற்கான தடை டிசம்பர் 7 வரை தொடரும், அதே நேரத்தில் எரிவாயுவால் இயக்கப்படும் லாரிகள் மற்றும் மின்சார லாரிகள் டெல்லிக்குள் நுழைய அனுமதிக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார். 

கட்டுமான பணிகளுக்கு தடை விதிக்கப்பட்டதால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு தலா ரூ. 5,000 நிதியுதவி வழங்கப்படும் என்று முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்திருந்தார். 

பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பிற கல்வி நிறுவனங்களில் நேரடி வகுப்புகள் திங்கட்கிழமை தொடங்கப்பட்டன. அரசு அலுவலகங்கள் மீண்டும் திறக்கப்பட்டன. நகரின் 14 பகுதிகளில் உள்ள அரசு ஊழியர்  குடியிருப்புகளில் இருந்து ஊழியர்களை அழைத்துச் செல்வதற்காக, அரசு சிறப்பு பேருந்து சேவையையும் தொடங்கியுள்ளது.

Tags:    

Similar News