செய்திகள்
முதல் மந்திரி நவீன் பட்நாயக்

இலவச தானியங்களை வழங்கும் திட்டத்தை நீட்டிக்க வேண்டும் - ஒடிசா முதல் மந்திரி கடிதம்

Published On 2021-11-22 04:51 IST   |   Update On 2021-11-22 04:51:00 IST
கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் ஜூன் வரை மட்டும் இலவச உணவு தானியம் வழங்குவதாக அறிவிக்கப்பட்ட இத்திட்டம், தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வந்தது.
புவனேஸ்வர்:

நாடு முழுவதும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 24-ம் தேதி நள்ளிரவு முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மார்ச் 26-ம் தேதி மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது, பிரதமரின் கரீப் கல்யாண் திட்டத்தின் கீழ் 1 லட்சத்து 70 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான நிவாரண திட்டத்தை அறிவித்தார். இதன்மூலம் நாடு முழுவதும் 80 கோடி பேருக்கு ரேஷன் கடைகள் மூலம் இலவச உணவு தானியங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

மானிய விலை உணவு தானியத்துக்குமேல் ஒவ்வொருவருக்கும் கூடுதலாக 5 கிலோ உணவு தானியம் இலவசமாக வழங்கப்படுகிறது. 

இதற்கிடையே, இலவச உணவு தானியங்கள் வழங்கும் பணி நவம்பர் 30-ம் தேதியுடன் முடிவடைகிறது என மத்திய அரசு சமீபத்தில் அறிவித்தது.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒடிசா மாநில முதல் மந்திரி நவீன் பட்நாயக் ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில், கொரோனா காலத்துக்கு முந்தைய நிலையை பொருளாதார நடவடிக்கைகள் இன்னும் எட்டவில்லை. வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு மக்கள் கஷ்டப்படுகிறார்கள். கொரோனா காலத்தில் அனைவருக்கும் உணவு கிடைப்பதை இத்திட்டம்தான் உறுதி செய்தது. ஆகவே, இலவச உணவு தானியம் வழங்குவதை மேலும் 8 மாதங்களுக்காவது நீட்டிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். 

Tags:    

Similar News