செய்திகள்
கோப்புப்படம்

மனைவிக்கு முத்தலாக் கூற மறுத்த கணவன்: கோபத்தில் அடித்து உதைத்த உறவினர்கள்

Published On 2021-11-16 14:08 GMT   |   Update On 2021-11-16 14:08 GMT
முத்தலாக் கூறி விவாகரத்து பெறுவது சட்டப்படி குற்றம் என உச்சநீதிமன்றம் தெரிவித்து, அதற்கான சட்டமும் நிறைவேற்றப்பட்ட நிலையில் சில சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.
இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த ஆண் ஒருவர் முத்தலாக் கூறி தனது மனைவிக்கு விவாகரத்து வழங்க முடியும். வாட்ஸ்-அப் மூலம முத்தலாக் கூறி விவாகரத்து பெற்ற சம்பவம் கூட நடைபெற்றுள்ளது. இதனால் விவாகரத்து பெறும் பெண்கள் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்படுவதுண்டு. முத்தலாக் மூலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர, மத்திய அரசு முத்தலாக் தடை சட்டத்தை கொண்டு வந்தது.

இந்த சட்டத்தின்படி, தலாக் கூறி விவாகரத்து செய்யும் ஆணுக்கு 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், அபராதமும் விதிக்கலாம். மனைவி மற்றும் குழந்தைக்கு கணவன் நிதி வழங்குவது குறித்து நீதிபதி முடிவு செய்யலாம்.

சட்டம் கொண்டு வந்தபின் சிலர் முத்தலாக் கூறி விவாகரத்து வழங்கியதாக வழக்கும் தொடரப்பட்டது. இந்த நிலையில் பெண் ஒருவர் தனது கணவரிடம் முத்தலாக் கூறச்சொல்லி அந்த கணவர் கூற மறுத்ததால், மனைவியின் உறவினர்கள் அந்த நபரை தாக்கிய சம்பவம் கேரளாவில் நடைபெற்றுள்ளது.

கேரள மாநிலம் மலப்புரம் கோட்டக்கல் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் வசித்து வருபவர் அப்துல் ஆசீப். இவருக்கு கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்துள்ளது. ஆசீப் நடவடிக்கை சரியில்லாததாலும், போதை பழக்கம் இருந்ததாலும், அவரது மனைவியுடன் சேர்ந்த வாழ விரும்பவில்லை.

இதனால் முத்தலாக் கூறி விவாகரத்து தரும்படி கணவரிடம் கேட்டுள்ளார். ஆனால், ஆசிப் முத்தலாக் கூற மறுப்பு தெரிவித்ததால், அப்துல் ஆசீப்பை, அவரது மாமனாருடன், மனைவியின் உறவினர்கள் சேர்ந்து தாக்கியுள்ளனர். இதனால் காயம் அடைந்த அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஆசிப்பை தாக்கியதாக ஆறுபேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.  முத்தலாக் கூற மறுத்ததால் கணவனரை  உறவினர்களுடன் சேர்ந்து மனைவி தாக்கிய சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News