செய்திகள்
பயோமெட்ரிக்

அரசு அலுவலகங்களில் மீண்டும் ‘பயோமெட்ரிக்’ வருகை பதிவு: மத்திய அரசு முடிவு

Published On 2021-11-02 03:10 GMT   |   Update On 2021-11-02 03:10 GMT
அலுவலகங்களில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் கொரோனா பொருத்தமான நடவடிக்கைகளை கடுமையாக பின்பற்ற வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது.
புதுடெல்லி :

நாடு முழுவதும் கொரோனா பரவல் உச்சத்தை தொட்டதை தொடர்ந்து அரசு அலுவலகங்களில் பயோமெட்ரிக் வருகை பதிவு முறை ரத்து செய்யப்பட்டது. தற்போது தொற்று கட்டுக்குள் வந்து கொண்டிருப்பதால் வருகிற 8-ந்தேதி முதல் அனைத்து நிலை ஊழியர்களுக்கும் பயோமெட்ரிக் முறையை மீண்டும் அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இது தொடர்பாக மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டு உள்ளது. அதன்படி, பயோமெட்ரிக் முறையில் வருகையை பதிவு செய்யுமுன் அனைத்து ஊழியர்களும் கையை சானிடைசர் மூலம் சுத்தம் செய்ய வேண்டும். இதற்காக பயோமெட்ரிக் கருவிக்கு அருகே சானிடைசர் பாட்டில்கள் இருக்க வேண்டும்.

வருகை பதிவு செய்யும் ஊழியர்கள் 6 அடி இடைவெளிவிட்டு நிற்க வேண்டும். வருகை பதிவு செய்யும் நேரம் உள்பட அலுவலகத்தில் எந்நேரமும் ஊழியர்கள் முககவசம் அணிய வேண்டும். கூட்டத்தை தவிர்க்க தேவைப்பட்டால் கூடுதல் கருவிகளையும் பயன்படுத்தலாம் என்பது போன்ற வழிகாட்டுதல்களை அரசு வழங்கியுள்ளது.

மேலும் அலுவலகங்களில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் கொரோனா பொருத்தமான நடவடிக்கைகளை கடுமையாக பின்பற்ற வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது.
Tags:    

Similar News