செய்திகள்
மெகபூபா முப்தி

ஓட்டு வாங்க தலிபான் பெயரை பாஜக பயன்படுத்துகிறது: மெகபூபா முப்தி குற்றச்சாட்டு

Published On 2021-09-20 02:55 GMT   |   Update On 2021-09-20 02:55 GMT
பாஜகவின் 7 ஆண்டுகால ஆட்சி, மக்களுக்கு துயரத்தை அளித்துள்ளது. காஷ்மீரை அழித்துவிட்டது. 70 ஆண்டுகளாக கட்டமைக்கப்பட்ட தேசிய சொத்துகளை விற்கிறது.
ஜம்மு :

காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரியும், மக்கள் ஜனநாயக கட்சி தலைவருமான மெகபூபா முப்தி, நேற்று காஷ்மீரின் ஜம்முவில் நடந்த கூட்டத்தில் பங்கேற்றார்.

அதில் அவர் பேசியதாவது:-

நான் தலிபான் பெயரை குறிப்பிட்டாலே, என்னை தேசவிரோதி என்று முத்திரை குத்துகிறார்கள். என்னை பற்றி விவாதம் நடத்துகிறார்கள். ஆனால், விவசாயிகள் போராட்டம், எரிபொருள் விலை உயர்வு போன்ற முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதிப்பது இல்லை.

பாஜகவுக்கு ஓட்டு வாங்குவதற்கு எந்த சரக்கும் இல்லை. அதனால் ஓட்டு வாங்க தலிபான், ஆப்கானிஸ்தான் ஆகிய பெயர்களை பயன்படுத்தி வருகிறது. உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் தேர்தல் நெருங்குவதால், இந்த பெயர்களை பயன்படுத்தும். அவை பலனளிக்காவிட்டால், பாகிஸ்தானையும், டிரோன்களையும் பற்றி பேசும்.

லடாக்கில் ஊடுருவிய சீனா பற்றி பாஜக பேசுவது இல்லை. ஏனென்றால் சீனா பெயரை பயன்படுத்தி, ஓட்டு வாங்க முடியாது என்று அக்கட்சிக்கு தெரியும்.

பாஜகவின் 7 ஆண்டுகால ஆட்சி, மக்களுக்கு துயரத்தை அளித்துள்ளது. காஷ்மீரை அழித்துவிட்டது. 70 ஆண்டுகளாக கட்டமைக்கப்பட்ட தேசிய சொத்துகளை விற்கிறது. பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி கஜானாவை நிரப்புகிறது.

அதை பயன்படுத்தி, பிற கட்சிகளின் மக்கள் பிரதிநிதிகளை விலைக்கு வாங்குகிறது. கட்சி மாற மறுத்தால், விசாரணை அமைப்புகள் மூலமாக அவர்களை துன்புறுத்துகிறது.

இந்துக்கள் யாரும் அச்சுறுத்தலில் இல்லை. இந்தியாவும், ஜனநாயகமும்தான் பாஜகவால் அச்சுறுத்தலில் உள்ளன. எல்லோருக்கும் வேலைவாய்ப்பு கொடுக்க முடியாத நிலை உள்ளது. அதற்கு என்னிடம் தீர்வு இருக்கிறது. அதுதான் சுயாட்சி.

அதாவது, எல்லையில் உள்ள பாரம்பரிய கடவுப்பாதைகள் திறந்து விடப்பட வேண்டும். அண்டை நாடுகள் இங்கு வங்கிக்கிளைகள் திறக்க அனுமதித்தால் வேலைவாய்ப்புகள் பெருகும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News