செய்திகள்
கோப்புப்படம்

அரியானாவில் மேம்பாலத்தை திறந்து வைத்த 12 வயது சிறுமி

Published On 2021-08-24 11:16 GMT   |   Update On 2021-08-24 11:16 GMT
ஜின்ட் மாவட்டம் பண்டு பின்டாரா கிராமத்தில் ஜின்ட்-சோனிப்பட் சாலையில் புதிய மேம்பாலம் ஒன்று கட்டப்பட்டு உள்ளது. பாலம் கட்டப்பட்டு 10 நாட்கள் முடிந்தும், திறக்கப்படாமல் உள்ளது.
சண்டிகர்:

அரியானா மாநிலத்தில் மனோகர்லால் கட்டார் தலைமையில் பா.ஜனதா- ஜே.எம்.எம். கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.

மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அரியானா மாநிலத்தில் இந்த போராட்டம் மிக தீவிரமாக இருக்கிறது.

அந்த மாநிலத்தின் பல்வேறு கிராமங்களில் அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட வி.ஐ.பி.க்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபடுவதால், உள்ளே செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அரசியல் தலைவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால், அம்மாநிலத்தில் 12 வயது சிறுமி மேம்பாலத்தை திறந்து வைத்துள்ளார்.

ஜின்ட் மாவட்டம் பண்டு பின்டாரா கிராமத்தில் ஜின்ட்-சோனிப்பட் சாலையில் புதிய மேம்பாலம் ஒன்று கட்டப்பட்டு உள்ளது. பாலம் கட்டப்பட்டு 10 நாட்கள் முடிந்தும், திறக்கப்படாமல் உள்ளது.

அரசியல் தலைவர்கள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால் பாலம் திறக்கப்படாமல் இருந்தது. இதைத் தொடர்ந்து கிராம மக்கள் 12 வயது சிறுமியான குஷிலகராவை வைத்து பாலத்தை திறந்தனர். பாலத்தை திறந்து வைக்கும் கவுரவம் அந்த சிறுமிக்கு கிடைத்தது.

இது தொடர்பாக அந்த கிராமத்தை சேர்ந்த சதீஷ்குமார் என்பவர் கூறியதாவது:-

தற்போது நிலவும் சூழ்நிலை காரணமாக பா.ஜனதா-ஜே.எம்.எம். தலைவர்களை மேம்பாலத்தை திறந்து வைக்க அழைக்க முடியாத நிலை ஏற்பட்டது. எந்தவித பிரச்சனையும் சந்திக்க நான் விரும்பவில்லை.

இதனால் மாவட்ட நிர்வாகத்திடம் தகவல் சொல்லி, எங்கள் கிராமத்து மகளை வைத்து ரிப்பன் வெட்டி பாலத்தை திறந்து வைத்தோம். அந்த பாலம் எங்களுக்கு மிகவும் அவசியமானது. 10 நாட்களுக்கு மேல் ஆகிவிட்டதால், நாங்களே திறந்து விட்டோம்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News